தமிழக அரசின் உத்தரவு நகல்.
தமிழக அரசின் உத்தரவு நகல்.

அரசு சேவை இல்லப் பள்ளிகளைக் கைவிட முடிவு!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 6 அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளிகளை வருகிற 30-ஆம் தேதிக்குள் மூடுவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது.


தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 6 அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளிகளை வருகிற 30-ஆம் தேதிக்குள் மூடுவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது.
தமிழக அரசின் சமூக நலத் துறை மூலமாக கடலூர், தஞ்சாவூர், சேலம், சிவகங்கை, திருநெல்வேலி, தாம்பரம் சானடோரியம் ஆகிய 6 இடங்களில் அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளானது விதவைகள், ஆதரவற்ற பெண்கள், குழந்தைகளுடன் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தங்குமிடம், உணவு, முறையான கல்வி, தொழில் கல்வி அளிப்பதற்காக தொடங்கப்பட்டவையாகும். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள 14 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் சேர்ந்து கல்வி பயிலலாம். இவர்கள் 6 முதல் பிளஸ்2 வகுப்பு வரை பயில வசதியாக சேவை இல்லத்தில் தங்கிக்கொள்ளலாம்.
பிளஸ்2 வகுப்பு முடித்து அவர்கள் கல்லூரியில் சேர வேண்டுமெனில் ரூ.50 ஆயிரமும், தொழில் கல்வி பயில ரூ.30 ஆயிரமும் அரசு உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. மேலும், ஆதரவற்ற பெண்களின் பெண் குழந்தையும் அதே சேவை இல்லத்தில் தங்கியிருந்து பிளஸ் 2  வகுப்பு வரை பயிலலாம். பாதிக்கப்பட்டவருக்கு மகன் இருந்தால் அவர் 5-ஆம் வகுப்பு வரை அங்கேயே தங்கியிருந்து படிக்கலாம்.
சேவை இல்லத்தில் தங்கியிருக்கும் அனைவருக்கும் மருத்துவ வசதி, கல்விச் சுற்றுலா, தையல் பயிற்சி, கணினிப் பயிற்சி, தொழில் கல்வி பயிற்சி, ஆசிரியர் பயிற்சி ஆகியவையும் வழங்கப்பட்டு, அவர்களுக்காகவே பல்வேறு பயிற்றுநர் பணியிடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு, வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை அனுபவித்த பெண்களுக்கு உதவும் வகையில், அரசு சேவை இல்லப் பள்ளிகள் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகின்றன. ஆனால், இந்தப் பள்ளிகள் விரைவில் மூடப்பட உள்ளதாகவும், அதனால், இந்தப் பள்ளிகளில் பயின்று வரும் மாணவிகளை வேறு பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் சமூக நல ஆணையர் மூலமாக அனைத்து அரசு சேவை இல்லங்களின் கண்காணிப்பாளர்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
அதில் தெரிவித்துள்ளதாவது: இந்தச் சேவை இல்லங்களில் வயது முதிர்ச்சியானவர்கள் யாருமே பயன் பெறுவதில்லை. பள்ளிக் கல்வி பயிலும் அதே வயதுடைய மாணவிகளே சேவை இல்லங்களில் உள்ளனர். பெற்றோர் இல்லாதவர்கள் 38 பேரும், தகப்பனோ, தாயோ ஒருவர் மட்டுமே உள்ளவர்கள் 164 பேரும் மட்டுமே உள்ளனர். மற்றபடி பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களே 58 சதவீதத்தினர் உள்ளனர். அதாவது, பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினருக்கான உண்டு உறைவிட பள்ளியாகவே இந்தச் சேவை இல்லங்கள் தற்போது செயலாற்றி வருகின்றன.
மொத்தம் 465 மாணவிகளுக்கு 33 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனாலும், இங்கு படித்தவர்களால் ஆசிரியராகவோ, மருத்துவர், பொறியாளர் போன்ற நிலையை எட்டவோ முடியவில்லை. சேவை இல்லத்தில் படித்தவர்கள் மீண்டும் சேவை இல்லத்தையே தங்களது பிழைப்புக்காக நாடி வருகின்றனர். எனவே, இந்தச் சேவை இல்லத்தால் எந்த பயனும் ஏற்படவில்லை.
மேலும், பாடத் திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய இயலவில்லை. கல்வித் துறையின் பராமரிப்பு, ஈடுபாடு, கண்காணிப்பு மிகவும் குறைவாக உள்ளது தெரிய வருகிறது. அரசு சேவை இல்லங்களில் கல்வித் தரத்தை உறுதி செய்யவும், அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலர்கள் போதிய நேரம் ஒதுக்க இயலவில்லை. 
எனவே, இதன் கல்வித் தரம் மெச்சும்படியாக இல்லை. ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தபட்சம் 2 முதல் அதிகபட்சம் 9 என்ற எண்ணிக்கையிலேயே மாணவிகள் உள்ளதால் அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படுகிறது. எனவே, அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளிகளை மூடிவிட்டு அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் அந்த மாணவிகளைச் சேர்க்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு சேவை இல்ல நிர்வாகிகள் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசு சேவை இல்ல மாணவிகளே 100 சதவீதம் தேர்ச்சியைப் பெற்று வருகின்றனர். இந்தச் சேவை இல்லங்களுக்கு அரசு ஆண்டுக்கு ரூ.6 கோடி மட்டுமே வழங்குகிறது. இதுபோன்ற சேவை இல்லங்களை நடத்துவதால், சமூக இடர்பாடுகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு  பல்வேறு வகையிலும் ஆறுதல் ஏற்படுகிறது. அவர்களது எதிர்கால வாழ்க்கையையும் உறுதிப்படுத்த முடியும். இந்தப் பள்ளிகளை மூடுவதால் சமுதாயத்தில் ஆதரவற்ற பெண்களின் நிலை மேலும் மோசமடையும். எனவே, அரசு சேவை இல்ல மேல்நிலைப் பள்ளிகளை மூடும் உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
வருகிற 30-ஆம் தேதிக்குள் இந்தப் பள்ளிகளை மூடிவிட்டு, அவர்கள் பரிந்துரைத்த பள்ளிகளில் மாணவிகளைச் சேர்த்த விவரத்தை தெரிவிக்க வேண்டுமென அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தற்போது சேவை இல்லத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கும் வேறு பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது என்று அவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com