8-ஆவது ஆண்டாக டெல்டாவில் குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாத சூழல்: விவசாயிகள்  பரிதவிப்பு

மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் நிகழாண்டும் குறுவைக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை உள்ளது. இதனால், 8-ஆவது ஆண்டாக விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாத சூழல்
8-ஆவது ஆண்டாக டெல்டாவில் குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாத சூழல்: விவசாயிகள்  பரிதவிப்பு

மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் நிகழாண்டும் குறுவைக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை உள்ளது. இதனால், 8-ஆவது ஆண்டாக விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை (ஜூன் 15) காலை நிலவரப்படி 45.32 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 14.99 டிஎம்சி ஆக உள்ளது. அணைக்கு நீர்வரத்தானது 535 கன அடியாக குறைந்துவிட்டது. 

மேலும், குடிநீருக்காக அணையிலிருந்து விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த சூழலில் நிகழாண்டும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்தண்ணீர் திறக்க முடியாத சூழல் உள்ளது. ஜூன் 12-ஆம் தேதிக்குள் தமிழகத்துக்கான தண்ணீரை தர வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்த கோரிக்கையை மத்திய அரசும், கர்நாடக அரசும் செயல்படுத்தவில்லை. தங்களுக்கே குடிநீர் பற்றாக்குறை இருப்பதாகக் கூறி கர்நாடகம் தண்ணீர் திறக்க மறுத்து வருகிறது. இது, காவிரி, டெல்டா விவசாயிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்டா மாவட்டங்களின் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படுவது வழக்கம். அணை பயன்பாட்டுக்கு வந்த 1934 -ஆம் ஆண்டு முதல் இதுவரை (2019) 25 முறை மட்டுமே உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இறுதியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மட்டுமே உரிய காலத்துக்கு முன்னதாக ஜூன் 6-ஆம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் பின்னர் தொடர்ந்து 8 ஆண்டுகளாக தண்ணீர் திறக்கப்படாத சூழலே உள்ளது. குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறந்தால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் மட்டும் 2.75 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும். இவை தவிர, திருச்சி, அரியலூர், கடலூர் மாவட்டங்களில் 1.25 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும். கடந்த 7 ஆண்டுகளாக இதில் 40 விழுக்காடு மட்டுமே சாத்தியமாகி வருகிறது.

80 ஆயிரம் பம்ப் செட்டுகள்: காவிரி டெல்டா பாசன பகுதிகளில் 80,000 பம்பு செட்டுகள் உள்ளன. இவற்றுக்கு போதிய அளவு மின்சாரம் வழங்கப்பட்டால் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி ஓரளவு குறுவை சாகுபடி மேற்கொள்ள இயலும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மழை பொய்த்து வறட்சி நிலவியதால் டெல்டா பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக குறைந்துவிட்டது. கிணறுகளில் ஓரளவுக்கு (30 முதல் 50 சதவீதம் வரை) தண்ணீர் உள்ளது. இதனை நம்பியும் குறுவை சாகுபடி செய்வது இயலாத காரியம் என்கின்றனர் விவசாயிகள்.

இதுதொடர்பாக, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியது:

கேரளம் மற்றும் கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழையானது ஒருவாரம் முன்னதாகவே தொடங்கிவிட்டது. இப்போது நல்ல மழை பெய்து வருகிறது. காவிரி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் நிகழாண்டு ஜூன் 12-இல் மேட்டூர் அணை திறக்கப்படும்; 7 ஆண்டுகளக்குப் பிறகு குறுவை சாகுபடி மேற்கொள்ளலாம் என நம்பியிருந்த விவசாயிகளுக்கு கர்நாடகத்தின் பிடிவாதமும், மேட்டூர் அணையின் பரிதாப நிலையிலும் பச்சாதாபத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற உத்தரவையும் பின்பற்றமாட்டோம், காவிரி ஆணைய உத்தரவை மதிக்கமாட்டோம் என கர்நாடக அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்றார்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பூ. விசுவநாதன் கூறியது: காவிரி, டெல்டா பாசனப் பகுதிகளுக்கு குறுவை தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். மேலும், விவசாயிகளுக்கு முழு மானியத் தொகை வழங்க வேண்டும். மானாவாரி பகுதிகளில் மாற்றுப் பயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் இடுபொருள், இயந்திரங்கள், பயிர்க் கடன் என விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வேளாண்மைத்துறை மூலம் போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் என்றார்.

ஜூன் இறுதிக்குள் தண்ணீர் திறந்தால் மட்டுமே வாய்ப்பு

தமிழக காவிரி-டெல்டா நீர்ப்பாசன விவசாயிகள் நல உரிமைப் பாதுகாப்பு சங்கச் செயலர் கே.பி. காந்திபித்தன் கூறியது:

மேட்டூர் அணையிலிருந்து ஜூன் இறுதிக்குள்ளாவது தண்ணீர் திறந்தால் மட்டுமே டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிசெய்ய முடியும். இல்லையெனில், 8-ஆவது ஆண்டும் குறுவை பொய்த்துப்போவதை தவிர்க்க முடியாது. கர்நாடக அணைகளில் தண்ணீர் இருந்தும், அந்த மாநில அரசு, தண்ணீர் இல்லை எனக் கூறி வருகிறது. காவிரிக்கு அமைக்கப்பட்ட ஆணையத்திடம் முறையிட்டு தண்ணீர் பெற வேண்டும். எந்த நடவடிக்கையாக இருந்தாலும் இந்த மாத இறுதிக்குள் எடுத்து தண்ணீர் திறக்க வேண்டியது அவசியமானது. குறுவைக்கு தண்ணீர் இல்லையெனில் டெல்டா விவசாயிகளின் நிலை கவலைக்குரியது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com