குற்றம் நடந்த இடத்திலிருந்தே புகார் தெரிவிக்க புதிய செயலி: சென்னை காவல் துறையில் அறிமுகம்

வீடு, அலுவலகம் மற்றும் குற்றம் நடந்த இடத்திலிருந்தே புகார் தெரிவிக்கும் வகையில் புதிய செயலியை சென்னை காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை பெருநகர காவல்துறையின் சார்பில் திருட்டு செல்லிடப்பேசிகளை
குற்றம் நடந்த இடத்திலிருந்தே புகார் தெரிவிக்க புதிய செயலி: சென்னை காவல் துறையில் அறிமுகம்

வீடு, அலுவலகம் மற்றும் குற்றம் நடந்த இடத்திலிருந்தே புகார் தெரிவிக்கும் வகையில் புதிய செயலியை சென்னை காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை பெருநகர காவல்துறையின் சார்பில் திருட்டு செல்லிடப்பேசிகளை கண்டறியும் வகையில் "டிஜிகாப் (DIGICOP)' என்ற பெயரிலான செல்லிடப்பேசி செயலி சேவை கடந்த பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது இந்த செயலி மேம்படுத்தப்பட்டு, இதில் சிசிடிஎன்எஸ் சேவை சேர்க்கப்பட்டு "டிஜிகாப் 2.0' என்ற பெயரில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

இந்த செயலி மூலம் பொதுமக்கள் இருக்கும் இடத்திலிருந்தே காவல் துறையினரிடம் புகார் அளிக்கலாம். மேலும் புகாரின் தற்போதைய நிலை, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வழக்கு, சி.எஸ்.ஆர்.  ஆகியவை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்த செல்லிடப்பேசி செயலி சேவையைத் தொடங்கி வைத்து சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதன் பேசியது:

கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட இந்த செயலியை 72,155 பேர் தங்களது செல்லிடப்பேசியில்  பதிவிறக்கம் செய்துள்ளனர். செல்லிடப்பேசி திருட்டு குறித்து 8,311 பேர் புகார் செய்துள்ளனர். இதன் மூலம் 1,227 செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல 151 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வெளி மாநிலங்களில் இருந்து தகவல்கள்: இந்த  செயலியில் 33,839  பேர் தங்களது செல்லிடப்பேசி எண்களைப் பதிவு செய்துள்ளனர். திருடுபோன 26,874 செல்லிடப்பேசிகள் குறித்த தகவல்கள்  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல தமிழகம் முழுவதில் இருந்தும், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய தென் மாநிலங்களில் திருடப்பட்ட செல்லிடப்பேசிகள் குறித்தும் தகவல்களை பெற்று, இதில் பதிவேற்றம் செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளோம்.

ஏனெனில் வெளி மாநிலங்களில் திருடப்பட்ட செல்லிடப்பேசிகள் இங்கேயும், இங்கே திருடப்பட்ட செல்லிடப்பேசிகள் வெளி மாநிலங்களிலும் விற்கப்படுகின்றன. இதைக் கண்டுபிடித்து செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்வதிலும், குற்றவாளிகளை கைது செய்வதிலும் உள்ள பிரச்னைகளை தீர்க்கவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்.

102 காவலர்கள் மீது நடவடிக்கை:  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குற்றத்தைத் தடுப்பது, குற்றவாளிகளைக் கைது செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த வாரம் போக்குவரத்துப் பிரிவு சார்பில் GCTP Citizen Services என்ற செல்லிடப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியில் போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடும் காவலர்கள் குறித்து புகைப்படம், விடியோ பதிவேற்றம் செய்து புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து இருந்தோம். அதன்படி கடந்த ஒரு வாரத்தில் இந்த செயலி மூலம் கிடைத்த புகார்களின் அடிப்படையில், போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபட்ட 102 காவலர்கள் மீது வழக்குப் பதியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

"டிஜிகாப்' பொதுமக்களிடம் வேகமாக பிரபலமடைந்து வருவதால், சிசிடிஎன்எஸ் சேவையை இதில் வழங்க முடிவு செய்து, அது இப்போது இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் சிரமங்களை குறைப்பதற்கே இந்த செயலியில் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வழங்கப்படும் புகார்களுக்கு போலீஸார் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதனுடைய முழுமையான பயனை காவலர்கள் செயல்பாட்டின் மூலமே அடைய முடியும். காவல்துறையின் அனைத்து சேவைகளையும் எதிர்காலத்தில் ஒரே தளத்தில் வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

இந் நிகழ்ச்சிக்கு தமிழக காவல் துறை தலைமையிட ஏடிஜிபி சீமா அகர்வால் முன்னிலை வகித்து பேசினார். நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர்கள் ஏ.அருண், ஆர்.தினகரன், மகேஷ்குமார் அகர்வால், இணை ஆணையர்கள் நஜ்முல் ஹோடா, சி.மகேஸ்வரி, விஜயகுமாரி, ஆர்.சுதாகர், டி.எஸ்.அன்பு, ஜெயகௌரி, துணை ஆணையர்கள் முத்துசாமி, ஆர்.திருநாவுக்கரசு, விமலா, நாஸ்காம் ஜிசிசி அமைப்பின் தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com