பிரச்னையாகும் பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்கள் முடக்கம்!

பொறியியல் கல்லூரிகளைப்போல,  பணியில் சேரும் பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்கள் அனைத்தையும்  வாங்கி முடக்கி வைக்கும்
பிரச்னையாகும் பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்கள் முடக்கம்!


பொறியியல் கல்லூரிகளைப்போல,  பணியில் சேரும் பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்கள் அனைத்தையும்  வாங்கி முடக்கி வைக்கும் நடைமுறையை கலை-அறிவியல்  கல்லூரிகளும்  தற்போது பின்பற்றத் தொடங்கியுள்ளன. 
இந்த விவகாரத்தில் தமிழக அரசு, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) போன்ற அமைப்புகளும் உடனடியாகத் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பொறியியல் கல்லூரிகள், அங்கு பணிபுரியும் பேராசிரியர்களின் பத்தாம் வகுப்பு முதல், பிஎச்.டி. வரையிலான அனைத்து அசல் சான்றிதழ்களையும் அவர்கள் வேலைக்குச் சேரும்போதே வாங்கி வைத்துக் கொள்வது வழக்கமான நடைமுறை. 
இவ்வாறு பணியில் சேரும் பேராசிரியர்கள், அந்தக் கல்லூரியிலிருந்து விலகும்போது அவர்களுடைய சான்றிதழ்களை நிர்வாகம் தர மறுப்பதும், குறிப்பிட்ட தொகையை செலுத்த கட்டாயப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. 
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திடம் பலமுறை புகார்கள் வந்தபோதும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்த பேராசிரியர் ஒருவருக்கு அண்ணா பல்கலைக்கழகத் துறைகளில் ஒன்றான குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் பணிவாய்ப்பு கிடைத்தது. 
எம்ஐடி-யில் பணியில் சேர்ந்து மூன்று மாதங்களான பிறகும்கூட, அவர் முன்னர் பணிபுரிந்த தனியார் பொறியியல் கல்லூரி அவருடைய அசல் சான்றிதழ்களைத் தர மறுத்தது.
இதனால் மனமுடைந்த அந்தப்பேராசிரியர்  தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, பொறியியல் கல்லூரிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்து ஏஐசிடிஇ-யும் அண்ணா பல்கலைக்கழகமும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பின. அதில், பொறியியல் கல்லூரிகள் தங்களுடைய அசல் சான்றிதழ்களை தர மறுப்பதாக ஏராளமான பேராசிரியர்களிடமிருந்து பல்கலைக்கழகத்துக்கு தொடர் புகார்கள் வருகின்றன. 
எனவே, கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு, சான்றிதழ் சரிபார்த்தலுக்குப் பின்னர் அவர்களின் அனைத்து அசல் சான்றிதழ்களும் உடனடியாகத் திரும்பக் கொடுக்கப்பட்டுவிட்டதை கல்லூரி தலைவரும், முதல்வரும் உறுதிப்படுத்த வேண்டும். பணிபுரியும் பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை கல்லூரிகள் வாங்கி வைக்கக்கூடாது. 
இதுதொடர்பான விஷயத்தில், பல்கலைக்கழகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றமும் ஏற்கெனவே அறிவுறுத்தியிருக்கிறது. 
எனவே, இவ்வாறு அசல் சான்றிதழ்களை உடனடியாக திரும்பக் கொடுக்காத கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுபோல யுஜிசியும் ஏற்கெனவே சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இந்த எச்சரிக்கைக்குப் பிறகும், அசல் சான்றிதழ்களை பேராசிரியர்களிடம் பொறியியல் கல்லூரிகள் தர மறுப்பதோடு, புதிதாக சேரும் பேராசிரியர்களிடம் அசல் சான்றிதழ்கள் வாங்கிவைப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இந்த நிலையில், இந்த நடைமுறையை இப்போது கலை-அறிவியல் கல்லூரிகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளன.
துணைவேந்தர் எச்சரிக்கை: இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி கூறியது:
பணியில் சேரும் பேராசிரியர்களிடம் அசல் சான்றிதழ்களை வாங்கி வைக்கக் கூடாது என பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற இணைப்புக் கல்லூரி முதல்வர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. 
அப்போது, புதிதாக பணியில் சேரும் பேராசிரியர்கள், வேறு கல்லூரிகளில் அதிக ஊதியம் கிடைக்கும்போது  அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாடத்தை முடிக்காமல் பருவத்தின் பாதியில் பணியிலிருந்து விலகிச் செல்கின்றனர். 
இதனால், மாணவர்களின் கல்வி  பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே, அவர்களிடம் அசல் சான்றிதழ்கள் அனைத்தையும் வாங்கி வைக்கிறோம். 
பணிபுரியும் பேராசிரியர்கள், அவசரத் தேவைகளுக்காக அசல் சான்றிதழ்களைக் கேட்டால், அதைக் கொடுப்பதற்கு கல்லூரி நிர்வாகம் தயாராக இருக்கிறது என்றனர்.
ஆனால், இந்த விளக்கத்தை பல்கலைக்கழகம் ஏற்றுக் கொள்ளவில்லை. அசல் சான்றிதழ்கள் அனைத்தையும் திரும்பக் கொடுத்துவிட வேண்டும் எனக் கூறியிருக்கிறோம்.
தேவைப்பட்டால் ஒப்பந்தப் பத்திரம் எழுதி வாங்கிக் கொள்ளலாம் என ஆலோசனை வழங்கியிருக்கிறோம்.
இதையும் மீறி, அசல் சான்றிதழ்களை முடக்கி வைக்கும் கல்லூரிகள் குறித்து பல்கலைக்கழகத்துக்கு உரிய ஆதாரங்களுடன் புகார் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com