ஊட்டமேற்றிய உரம் தயாரிக்க வேளாண்மைத் துறை அறிவுறுத்தல்

மானாவாரிப் பருவம் தொடங்குவதால் முன்கூட்டியே ஊட்டமேற்றிய உரம் தயாரிக்க வேளாண்மைத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 ஊட்டமேற்றிய உரம் தயாரிப்பதை பார்வையிடுகிறார் வேளாண்மை உதவி இயக்குநர் ஆசைத்தம்பி.
 ஊட்டமேற்றிய உரம் தயாரிப்பதை பார்வையிடுகிறார் வேளாண்மை உதவி இயக்குநர் ஆசைத்தம்பி.


கோபி: மானாவாரிப் பருவம் தொடங்குவதால் முன்கூட்டியே ஊட்டமேற்றிய உரம் தயாரிக்க வேளாண்மைத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடிக்காக ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பது குறித்து கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளதாவது:
மானாவாரி சாகுபடி வயல்களில் உரமிட்ட பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கிறது என ஆராய்ச்சி முடிவுகள் மூலம் தெரிய வருகிறது. தமிழகத்தில் மானாவாரி சாகுபடிப் பரப்பில் 10 சதவீதம் மட்டுமே போதிய உரமிடப்படுகிறது. கோபி வட்டாரத்தில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் மானாவாரிப் பகுதியாக உள்ளது. இதில் 3500 ஏக்கருக்கும் அதிகமாக ஆண்டுதோறும் மானாவாரி நிலக்கடலை பயிராகிறது. நிச்சயமற்ற மழை மற்றும் வறட்சி காரணமாக மானாவாரி நிலக்கடலைக்கு உரமிட விவசாயிகள் தயங்குகின்றனர். மேலும் போதிய தொழு உரம் கிடைக்காததாலும் அதன் விலை அதிகமாக இருப்பதாலும் இயற்கை உரத்தின் பயன்பாடும் குறைந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் பயிருக்கு உரமிடுவதில் புதிய உத்தியைக் கையாள்வது அவசியமாகிறது. அதிகம் செலவு பிடிக்காத மிகவும் எளிமையான ஊட்டமேற்றிய தொழு உரம் இடும் முறையை  கையாள்வதன்  மூலம் மானாவாரியிலும் மகத்தான மகசூலைப் பெறலாம். 
தயாரிப்பது எப்படி?: ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பது மிகவும் எளிமையானதாகும், மானாவாரி நிலக்கடலை விதைப்பதற்கு குறைந்தது ஒரு மாதம் முன்பே இதைத் தயாரித்து வைக்க வேண்டும். ஒரு வண்டி சுமார் 300 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் (சாணிக்குப்பை) ஓர் ஏக்கருக்கு பரிந்துரை செய்யப்படும் உரங்களான 25 கிலோ சூப்பர் பாஸ்பேட், 30 கிலோ பொட்டாஷ் ஆகிய உரங்களை நன்கு கலந்து மூட்டமாகக் குவித்து வைத்து நிழலில் களிமண் மூலம் நன்கு மூடி வைக்க வேண்டும், அல்லது நன்கு தண்ணீர் தெளித்து கெட்டியாக குவியலைத் தட்டிவிட வேண்டும். காற்றுப்புகாத நிலையில் உரச்சத்துகள் வீணாகாமல் தடுக்கப்படும். அதை அப்படியே ஒரு மாதகாலம் விட்டு வைக்கும்போது தொழு உரம் ஊட்டம் பெற்று கூடுதல் சத்துகளைப் பெறுகின்றன.
ஒரு மாதம் கழித்து இத்துடன் 9 கிலோ யூரியாவைக் கலந்து பருப்பு விதைக்கும்போது அந்தப் படைக்காலிலேயே தூவிவிட வேண்டும். அதாவது முழுவதும் அடியுரமாகவே இட வேண்டும். டிராக்டர் மூலம் விதை விதைக்கும்போது விதைப்புக்கு முன்பாக இந்த ஊட்டமேற்றிய தொழு உரத்தை சீராக வயல் முழுவதும் தூவி விடலாம்.
பயன்கள்: இதன்மூலம் மானாவாரி நிலக்கடலைக்கு இட வேண்டிய உரச்சத்துகள் இழப்பின்றிப் பயிருக்கு உடனே கிடைக்கின்றன. பயிர்களின் வேர் வளர்ச்சி அதிகமாகி மகசூல் கூடுகிறது. மணிச்சத்து வீணாகாமல் பயிருக்கு கிடைக்கிறது. மண்ணின் இயற்பியல் தன்மை மேம்படுகிறது. மண்ணில் நீர் தேங்கும் திறன் அதிகரிக்கிறது. மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மற்ற சத்துகளும் பயிருக்கு கிடைத்து விளைச்சல் அதிகரிக்கிறது. 
வறட்சியின்போது ரசாயன உரமிடுவதால் ஏற்படும் அபாயமும் குறைகிறது. அது மட்டுமன்றி ஓரளவு தொழு உரமும் பயிருக்கு இடும் வாய்ப்புக் கிட்டுகிறது. ஓர் ஏக்கருக்கு ஒரு வண்டிக்கும் கூடுதலாக தொழு உரம் இட்டால் இன்னும் மகசூல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. 
ஒரு ஏக்கருக்கு குறைந்தது இரண்டு பொட்டலம் (400 கிராம்) ரைசோபியம்,  இரண்டு பொட்டலம் பாஸ்போபேக்டீரியா ஆகிய உயிர் உரங்களை நிலக்கடலை விதையுடன் ஆறிய கஞ்சியில்  கலந்து  விதை  நேர்த்தி செய்து விதைப்பதால் கூடுதல் மகசூல் பெறலாம்.  விதை விதைக்கும்போது மேற்கூறப்பட்ட உயிர் உரங்களைத் தனியாக சிறிது தொழு உரத்துடன் கலந்து நேரடியாக வயலில் இட்டும் அதிக மகசூல் பெறலாம். பெருகிவரும் உரத் தட்டுப்பாடு, இடு பொருள்களின் விலை உயர்வு போன்ற இடர்பாடுகளுக்கு மத்தியில் இதற்கு மாற்றாக நல்ல தரமான ஊட்டமேற்றிய தொழு உரத்தை விவசாயிகள் உற்பத்தி செய்து பயன்படுத்தி நல்ல மகசூல் பெறலாம் என கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com