பதவி நாற்காலியைக் கெட்டியாக பிடித்துக் கொள்வதில் மட்டுமே கவனம்: முதல்வர் மீது தினகரன் சாடல் 

பதவி நாற்காலியைக் கெட்டியாக இறுக்கிப் பிடித்துக் கொள்வதில் மட்டுமே பழனிச்சாமி கவனம் செலுத்தி வருகிறார் என்று காவிரி நீர் விவகாரத்தில் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
பதவி நாற்காலியைக் கெட்டியாக பிடித்துக் கொள்வதில் மட்டுமே கவனம்: முதல்வர் மீது தினகரன் சாடல் 

சென்னை: பதவி நாற்காலியைக் கெட்டியாக இறுக்கிப் பிடித்துக் கொள்வதில் மட்டுமே பழனிச்சாமி கவனம் செலுத்தி வருகிறார் என்று காவிரி நீர் விவகாரத்தில் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக அவர் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மேட்டூர் அணையைத் திறப்பதற்குத் தண்ணீர் இல்லாத நிலையில், கர்நாடகாவிடம் இருந்து காவிரி நீரைப் பெறுவதற்கு துரும்பைக்கூட கிள்ளிப்போடாமல் பழனிச்சாமி அரசு மௌனம் காப்பது வேதனை  அளிக்கிறது.

பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது மரபு. அதன்படி இன்று அணையைத் திறப்பதற்குப் போதுமான தண்ணீர் இருப்பு இல்லை.  தமிழகத்திற்கு 9.19 டி.எம்.சி நீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும் அம்மாநிலம் வழக்கம் போலவே சண்டித்தனம் செய்கிறது. இதனால் மேட்டூர் அணை மூலம் பாசனம் பெறும் டெல்டா உள்ளிட்ட 12 மாவட்டங்களில் தண்ணீர் இன்றி சாகுபடிப் பணிகளை எப்படி தொடங்குவது என்று தெரியாமல் விவசாயிகள் தவித்து நிற்கின்றனர்.

தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர்ப்பஞ்சம் ஏற்பட்டு மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் வீராணம் குடிநீரைப் பெறும் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல், காவிரி நீரைப் பெறுவதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பதவி நாற்காலியைக் கெட்டியாக இறுக்கிப் பிடித்துக் கொள்வதில் மட்டுமே பழனிச்சாமி கவனம் செலுத்தி வருகிறார்.

தண்ணீர் வாங்கிக் கொடுத்து விவசாயத்தைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக வேளாண்மையை அழித்திடும் எண்ணெய்க்குழாய் - எரிவாயுக்குழாய்கள் பதித்தல், எட்டுவழிச்சாலை போடுதல், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதில் மக்கள் விரோத பழனிச்சாமி அரசு பன்மடங்கு வேகம் காட்டிவருகிறது. 

காவிரி தண்ணீரில் தமிழ்நாட்டின் பங்கு என்பது 'மரபு வழிப்பட்ட உரிமை’ என்ற அடிப்படையில் வறட்சிக் காலத்திற்குரிய நீர்ப்பகிர்வு வழிமுறைப்படி தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை பழனிச்சாமி அரசு தாமதமின்றி மேற்கொள்ள வேண்டுமெனவலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com