புதன்கிழமை 19 ஜூன் 2019

நடிகர் சங்க நில முறைகேடு வழக்கு: காஞ்சிபுரம் குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடிகர் விஷால் ஆஜர்

DIN | Published: 12th June 2019 02:29 AM


நடிகர் சங்க நில முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு நடிகர் விஷால், காஞ்சிபுரம் குற்றப் பிரிவு போலீஸார் முன் செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.
சென்னை கூடுவாஞ்சேரி அருகே உள்ள வேங்கடமங்கலம் கிராமத்தில் நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக 26 சென்ட் நிலம் இருந்தது. இந்த நிலத்தை சங்கத் தலைவராக இருந்த சரத்குமார், பொதுச் செயலராக இருந்த ராதாரவி உள்ளிட்ட 4 பேர் முறைகேடாக விற்பனை செய்து விட்டதாக காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் தற்போதைய நடிகர் சங்க பொதுச் செயலரும், நடிகருமான விஷால் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையில் நடிகர் சங்கத் தலைவர் நாசர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, இந்த வழக்கை முறையாக விசாரித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி, நடிகர் சங்க பொதுச் செயலர் விஷால் மீண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, இப்புகார் குறித்து விசாரணை நடத்தி 3 மாத காலத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அத்துடன், மாவட்ட எஸ்.பி. இவ்வழக்கு விசாரணையைக் கண்காணிக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதைத் தொடர்ந்து, நடிகர் விஷால் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர்கள் சரத்குமார், ராதாரவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்குத் தேவையான உரிய ஆவணங்களை மே 10-ஆம் தேதி நேரில் ஆஜராகி தாக்கல் செய்ய வேண்டும் என விஷாலுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், அவர் அப்போது ஆஜராகவில்லை. 
படப்பிடிப்பு வேலைகள் இருப்பதால் மற்றொரு நாளில் ஆஜராவதாக விஷால் தரப்பில் பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அவரது தரப்பு உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பிறகுதான் மேற்கொண்டு இதில் விசாரணை நடத்த முடியும் என மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே, நடிகர் சங்க நில முறைகேடு வழக்கில் நடிகர் ராதாரவியும், சரத்குமாரும் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டது. எனினும், அவர்கள் இதுவரை மாவட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் நேரில் ஆஜராகவில்லை. 
இந்த வழக்கு தொடர்பாக விஷால் அண்மையில் தனது மேலாளர் மூலம் குற்றப்பிரிவு போலீஸாரிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்திருந்தார். இதையடுத்து, அவர் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்து வரும் குற்றப்பிரிவு ஆய்வாளர், பயிற்சிக்காக வெளியூர் சென்றுள்ளார். 
இதனால் தற்போது இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவின் துணைக் கண்காணிப்பாளர் தென்னரசு, நடிகர் விஷாலிடம் விசாரணை நடத்தினார். அப்போது, தன்னிடம் உள்ள ஆதாரங்கள் குறித்து விஷால் வாக்குமூலம் அளித்தார்.
ரஜினி, கமல் ஆதரவு குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்
நடிகர் சங்க நில விவகாரம் தொடர்பான விசாரணைக்குப் பின், விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அனைத்துத் துறைகள் போலவே திரைப்படத் துறையிலும் வெற்றி, தோல்விகள் உள்ளன. இது வியாபாரம். எனவே, வெற்றி, தோல்விகள் இருக்கவே செய்யும். இதில் புதிதாக எந்த மாற்றமும்  கிடையாது. 
நடிகர் சங்கத் தேர்தலில் ரஜினியும், கமலும் அதிகாரபூர்வமாக யாருக்கு ஆதரவு என்று சொல்லும் வரை அதை வதந்தியாக யாரும் பரப்ப வேண்டாம். இத்தேர்தல் எப்போது நடந்தாலும் எதிரணி என்று ஒன்று இருக்கத்தான் செய்யும். ஒவ்வொரு அணியும் என்ன செய்திருக்கிறோம் என்பதை மற்ற நடிகர்களிடம் சொல்வது கட்டாயமாக இருக்கும். அதேபோல், என்ன செய்திருக்கிறோம் என்பதை மற்ற  நடிகர்களிடம் நாங்கள் பகிர்ந்துள்ளோம். அதன்பேரில், சக நடிகர்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறோம். 
நடிகர் சங்கக் கட்டடத்தைக் கட்டி முடிப்பதற்கு ஏதாவது ஒரு காரணம் தடையாக வந்து விடுகிறது. அதில் ஏதேனும் ஒரு குறையைக் கண்டுபிடித்து அதற்காக தடை விதிக்கிறார்கள். அதையும் தாண்டி இந்த இந்தக் கட்டடம் கட்டுவதில் எந்த விதிமீறலும் இல்லை. இதை நீதிமன்றம் வாயிலாக வெளிக்கொண்டு வந்து நிரூபிக்க வரும்போது காலதாமதம் ஏற்படுகிறது. இந்த ஆண்டில் நடிகர் சங்கக் கட்டடத்தின் திறப்பு விழா  நிச்சயம் நடைபெறும் என்றார் விஷால்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

வைகோவுக்கு எதிரான தேசத் துரோக வழக்கு: ஜூலை 5-இல் தீர்ப்பு
தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் 1980ல் படித்து அரியா் வைத்திருப்பவா்கள் தோ்வெழுத சென்னை பல்கலைகழகம் சிறப்பு அனுமதி
பொறியியல் கலந்தாய்வு: தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு
சென்னையில் உள்ள பள்ளிகளில் இனி மழைநீா் சேகரிப்பு கட்டாயம்: முதன்மைக் கல்வி அலுவலா் உத்தரவு
அந்த நல்ல செய்தி வந்துவிட்டது: சென்னையில் மழையில்லாத நாட்கள் முடிவுக்கு வரவிருக்கிறது