செவ்வாய்க்கிழமை 20 ஆகஸ்ட் 2019

அப்பாவின் அடிச்சுவட்டில்... உதயநிதி ஸ்டாலின்!

By ஆர். முருகன்| DIN | Published: 12th June 2019 01:26 AM

இளைஞரணியின் புதிய செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமிக்கும் முயற்சியில் திமுக தலைமை முனைப்புக்காட்டத் தொடங்கியிருக்கிறது.
உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி செயலர் பதவி வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் ஆளுகைக்குள்பட்ட திருச்சி வடக்கு, தெற்கு மாவட்ட செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றி பல மாவட்டங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.


மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் திமுக கூட்டணியின் சார்பில் மு.க.ஸ்டாலின் மட்டுமே அனைத்து தொகுதிகளிலும் வந்தார். தனது தலைமையை உறுதிப்படுத்திக் கொள்ளவும், இதர முன்னணி பேச்சாளர்களுடன் தான் ஒப்பிட்டுப் பேசப்படக் கூடாது என்பதற்காகவும் தெரிந்தே எடுக்கப்பட்ட முடிவு அது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட, திமுக கூட்டணியில் இருந்த எந்தவொரு முன்னணித் தலைவருக்கும் தேர்தல் பிரசாரத்தில் முக்கியத்துவம் தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலின்தான் அனைத்து தொகுதிகளிலும் கிராமம், கிராமாகச் சென்று இரவு, பகலாக பிரசாரம் செய்தார். தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள் பெரிதும் வரவேற்பையும் பெற்றன. பொதுமக்கள் மத்தியிலும், திமுக தொண்டர்கள் மத்தியிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு அறிமுகமும், அரசியல் களமும் அமைத்துத்தர கடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரம் திமுக தலைமைக்கு உதவியது. அதற்காக, திமுகவின் ஏனைய நட்சத்திரப் பேச்சாளர்கள் அனைவருமே ஒரு சில தொகுதிகளில் மட்டுமே பிரசாரத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். உதயநிதி ஸ்டாலினின் சினிமா அறிமுகம், தந்தை மு.க. ஸ்டாலினைவிட அவருக்கு சமுதாயக் கவர்ச்சியைத் தந்தது என்றுகூடக் கூறலாம்.
தமிழக முதல்வரும் தனது பிரசாரத்தின்போதெல்லாம் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்துக்கு பதில் அளித்து பேசும் நிலை உருவானது. இதையடுத்து உதயநிதி ஸ்டாலினை திமுக இளைஞரணி செயலராக்க வேண்டும் என்ற முழக்கம் கட்சிக்குள் வலுவாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. 
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 37 எம்.பி-க்கள், இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அனைத்து மாவட்டச் செயலர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியபோதும், உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் திமுக வெற்றிக்கு வலு சேர்த்திருப்பதை குறிப்பிட்டு அவருக்கு இளைஞரணி செயலர் பதவி வழங்க வேண்டும் என கூறியுள்ளனர். இதுமட்டுமல்லாது மாவட்டச் செயலர்கள் தனிப்பட்ட முறையில் கடிதங்களையும் அனுப்பி வருகின்றனர்.
1980-இல் திமுக-வில் இளைஞரணி தொடங்கப்பட்டபோது அமைப்புக் குழு உறுப்பினராகத்தான் மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். பின்னர், அமைப்பாளராகவும், 1983-ஆம் ஆண்டு இறுதியில்தான் இளைஞரணியின் செயலராகவும் நியமிக்கப்பட்டார். 
1968-இல் பள்ளி பருவத்திலேயே கோபாலபுரத்தில் இளைஞர் திமுக-வை ஏற்படுத்தியிருந்தார் ஸ்டாலின். அன்று தொடங்கிய அவரது கட்சி ஈடுபாடு மிசா சிறைவாசத்தால் மேலும் நல்ல பெயரை பெற்றுத்தந்து இளைஞரணிக்கு தலைமையேற்கச் செய்தது. அப்போதிலிருந்து 2017-ஆம் ஆண்டு வரையிலும் தனக்கு 66 வயதிலும்கூட இளைஞரணியைத் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தார் மு.க. ஸ்டாலின். 
அந்தப் பதவியை உடனடியாக தனது மகனுக்கு வழங்கினால் கட்சிக்குள் தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும் என்பதால் உதயநிதிக்கு பதவி வழங்கலாமா?, வேண்டாமா? என்ற குழப்பத்தில் கட்சித் தலைமை முடிவெடுக்க முடியாமல் தயங்கி வருகிறது. முன்பு ஸ்டாலினை அமைச்சராக்குவதற்கும், அவரைக் கட்சியின் பொருளாளராக்குவதற்கும், கட்சியின் செயல் தலைவராக்குவதற்கும், எதிர்க்கட்சித் தலைவராக்குவதற்கும், மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதிக்கு இருந்ததுபோன்ற அதே தயக்கம் இப்போது மு.க. ஸ்டாலினுக்கும் ஏற்பட்டிருக்கிறது. 
ஏறக்குறைய 34 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்டாலின் வகித்த திமுக இளைஞரணி செயலாளர் பதவியில் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் மு.பெ. சாமிநாதன் நியமிக்கப்பட்டார். இணைச் செயலராக சுபா. சந்திரசேகர், துணைச் செயலர்களாக ஆர்.டி. சேகர், ப. தாயகம் கவி, அசன்முகமது ஜின்னா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பைந்தமிழ் பாரி, எஸ். ஜோயல், ஆ. துரை ஆகியோர் உள்ளனர். இப்போது, உதயநிதியை இந்த அணியின் தலைமைக்கு நியமிக்க மூத்த அமைச்சர்களும், மாவட்டச் செயலர்களும் முன்னிலைப்படுத்தி வருகின்றனர். 
திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கியபோது, உதயநிதி ஸ்டாலினின் ரசிகர்மன்ற தலைமை பொறுப்பை ஏற்று செயல்பட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழிதான், திமுக இளைஞரணி பொறுப்புக்கு உதயநிதியை கொண்டுவருவதிலும் உற்சாகத்துடன் செயல்பட்டு வருகிறார். தற்போது திருவெறும்பூர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராகவும், திமுக இளைஞரணி மாநில துணைச் செயலராகவும் உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியது:
உதயநிதிக்கு இளைஞரணிச் செயலர் பதவி என்ற கோரிக்கையுடன் திமுக மாவட்டச் செயலர்கள் பலரும் கட்சியின் தலைமைக்கு கடிதங்களை அனுப்பியுள்ளனர். பெரும்பாலான மாவட்டங்களில் மாவட்ட செயற்குழுக்களைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றியும் தலைமைக்கு அனுப்பியுள்ளனர். இளைஞரணி நிர்வாகிகளும் தங்களது பங்குக்கு தனித்தனியே கடிதங்களை அனுப்பியுள்ளனர். பொறுப்பு வழங்குவதை கட்சித் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு திருச்சியில் முதன்முறையாக திங்கள்கிழமை (ஜூன் 10) நடைபெற்ற வாக்காளர்களுக்கான நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், எந்தப் பதவியையும் எதிர்பார்த்து மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. திமுக-வில் தொண்டன் என்ற பெரிய பொறுப்பே எனக்கு போதும் என்றார். 
திமுக-வின் தீரர் கோட்டமாகிய திருச்சியில்தான் மு.க.ஸ்டாலினும் முன்னிலைப்படுத்தப்பட்டார். இந்த வழியில் உதயநிதியையும் உடன்பிறப்புகள் புதிய பதவிக்கு முன்மொழிந்து வருகின்றனர்.
அண்ணா காலத்தில் இருந்த திமுக ஒரு குடும்பம் என்கிற நிலைமை மாறி, கருணாநிதி காலத்திலேயே அது குடும்பம்தான் திமுக என்று மாறிவிட்ட நிலையில், தலைவரின் மகன் இளைஞரணித் தலைவர் என்று நியமிக்கப்படுவது மரபு வழி வழக்கம்தானே தவிர புதிதல்ல. உதயநிதி ஸ்டாலினை இளைஞரணிச் செயலாளராக நியமிப்பதற்கான முன்னோட்டம் தொடங்கிவிட்டது. அறிவிப்பு எப்போது என்பதில்தான் சஸ்பென்ஸ் நிலவுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

கலை, இலக்கியம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏராளம்
சட்ட மாணவர்கள் ஆராய்ந்து கற்க வேண்டும்: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா
ராணுவ வீரர்களுக்கு ஈஷாவில் ஹடயோக பயிற்சி
பால் விலை உயர்வு: படிப்படியாக உயர்த்தியிருக்கலாம்- தமிழிசை சௌந்தரராஜன்
பால் விலை உயர்வு மக்களை பாதிக்கும்: கே.எம். காதர்மொய்தீன்