திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

பி.இ. சேரும் மாணவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு மேலும் குறைய வாய்ப்பு: சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 14 ஆயிரம் பேர்

By  -நமது நிருபர்-| DIN | Published: 11th June 2019 01:22 AM

பி.இ. ஆன்லைன் கலந்தாய்வுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி புதன்கிழமையுடன் முடிவடைய உள்ள நிலையில், 14 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் அதில் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளனர்.
 இதன் காரணமாக, மாணவர் சேர்க்கையின்றி காலியாக விடப்படும் பி.இ. இடங்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அலுவலர்கள் தெரிவித்தனர்.
 மென்பொருள் நிறுவனங்களின் ஆள்குறைப்பு நடவடிக்கை, ஊதிய உயர்வு நிறுத்தம் போன்ற காரணங்களால் பொறியியல் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் குறையத் தொடங்கியது. அதே நேரம், கலை-அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
 கடந்த 2017-ஆம் ஆண்டு வரை இதே நிலை நீடித்தது. ஆனால், 2017 அரையாண்டுக்குப் பிறகு, இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கான வெளிநாட்டு பணி வாய்ப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கின. இந்த நிறுவனங்கள் பணியாளர் தேர்வையும் அதிகரித்தன.
 இதன் காரணமாக 2018-ஆம் ஆண்டு முதல் பி.இ. கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த ஆண்டும் 1.33 லட்சம் மாணவ, மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்தனர்.
 1.72 லட்சம் பி.இ. இடங்கள்: 2019-20 ஆம் கல்வியாண்டுக்கான ஆன்லைன் கலந்தாய்வுக்கு எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு சுயநிதி பொறியியல் கல்லூரிகள் தங்களுடைய நிர்வாக ஒதுக்கீட்டு பி.இ. இடங்களில் 30 ஆயிரம் இடங்களை அரசிடம் ஒப்படைத்துள்ளன. இதன் காரணமாக இந்த ஆண்டு 1 லட்சத்து 72 ஆயிரத்து 148 பி.இ. இடங்கள் கலந்தாய்வில் இடம்பெற்றுள்ளன. ஆனால், விண்ணப்பித்தவர்கள் 1 லட்சத்து 33 ஆயிரம் பேர் என்பதால், கலந்தாய்வு தொடங்கும்போதே 39,148 இடங்கள் காலியாக விடப்படும் நிலை இருந்தது.
 14 ஆயிரம் பேர் தவிர்ப்பு: ஆனால், இந்த ஆண்டு அசல் சான்றிதழ் சரிபார்ப்பை 14 ஆயிரத்து 371 மாணவ, மாணவிகள் தவிர்த்துள்ளனர். விண்ணப்பித்த 1.33 லட்சம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த 7-ஆம் தேதி தொடங்கி வரும் புதன்கிழமையுடன் (ஜூன் 12) முடிவடைய உள்ளது. இதில் பங்கேற்க ஞாயிற்றுக்கிழமை வரை 73 ஆயிரத்து 101 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
 இவர்களில் 58,730 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். 14 ஆயிரத்து 371 பேர் வரவில்லை. சான்றிதழ் சரிபார்ப்பு இன்னும் இரு தினங்கள் நடைபெறும் என்பதால், இதில் பங்கேற்காதவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்ட வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 காலியிடங்கள் அதிகரிக்கும்: இதன் காரணமாக, இந்த ஆண்டில் பி.இ. படிப்புகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட குறையும் என்பதுடன், சேர்க்கையின்றி காலியாகும் பி.இ. இடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
 இந்த ஆண்டு கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் இதுவரை பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், ஆன்லைன் பி.இ. கலந்தாய்வு தொடங்கும்போதே 53,519 இடங்கள் காலியாக விடப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 கடந்த ஆண்டு நிலவரம்: கடந்த 2018-19 ஆம் ஆண்டு கலந்தாய்வில் 1.73 லட்சம் பி.இ. இடங்கள் இடம் பெற்றிருந்தன. இவற்றில் 74,601 இடங்கள் நிரம்பின. மாணவர் சேர்க்கை இன்றி 97,980 இடங்கள் காலியாக விடப்பட்டன. இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அலுவலர்கள் கூறியது:
 அசல் சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்திருக்கும் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைவிட கூடுதல்தான். இருந்தபோதும், தவிர்க்கமுடியாத காரணங்களால் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க இயலாமல்போன மாணவர்கள், புதன்கிழமைக்குள் அவர்களுக்குரிய கலந்தாய்வு உதவி மையத்துக்குச் சென்று அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம் என்றனர்.
 
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஆறுகள் மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை:  தமிழக முதல்வர் கே. பழனிசாமி உறுதி
சென்னை மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க ரூ.6 ஆயிரம் கோடியில் புதிய திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்
திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் தமிழகம்:  மு.க.ஸ்டாலின்
ஊதிய பட்டியலில் திருத்தம் செய்து ரூ. 86 லட்சம் மோசடி: துப்புரவு ஊழியர் பணியிடை நீக்கம்
பூரண மதுவிலக்கு கோரி குமரி அனந்தன் உண்ணாவிரதம்