திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

பலன் தராத மரக்கன்று வளர்ப்புத் திட்டம்

DIN | Published: 10th June 2019 02:00 AM

ஈரோடு: நூறு நாள் வேலைத்திட்டம் மூலம் மரக்கன்று வளர்க்கும் திட்டம் பெயரளவிலேயே நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் நடப்பட்டபோதிலும், சில ஆயிரம் மரக்கன்றுகள் கூட இப்போது உயிர்ப்புடன் இல்லை. இதனால் மரக்கன்றுகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
 கிராமப்புறங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், ஓடைகள், வரத்துக் கால்வாய்கள், நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் வனத் துறை மூலம் மரக் கன்றுகள் வாங்கப்பட்டு நடப்படுகின்றன. இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் (100 நாள் வேலைத் திட்டம்) பணியாளர்கள் மூலம் தினமும் தண்ணீர் ஊற்றப்பட்டு மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன.
 இதன் மூலம் பசுமைப் பகுதியாக மாற வாய்ப்புள்ளதால் அரசும் நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஊரகப் பகுதிகளில் அரசுப் புறம்போக்கு நிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றில் வேம்பு, அரசு, மா, பலா உள்ளிட்ட 10 வகையான மரக்கன்றுகள் வளர்க்கப்படுகின்றன. மொத்தமாக மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள இடங்களில் தண்ணீர் ஊற்றுவதற்காக ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர்த் தொட்டிகளும் கட்டப்பட்டுள்ளன.
 கடந்த 2 ஆண்டுகளாக மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலான இடங்களில் மரக்கன்றுகள் வளரவே இல்லை. லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் நடப்பட்டாலும் சில ஆயிரம் குழிகளில் மட்டுமே மரக்கன்றுகள் உள்ளன. ஆனால், பெரும்பாலான கிராமங்களில் நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்களை வைத்து பெயரளவில் தண்ணீர் ஊற்றும் பணி நடந்து வருகிறது.
 கருகிப்போன மரக்கன்றுகள்:
 இதுகுறித்து சிறு, குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு கூறியதாவது: மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள பல குழிகளில் தண்ணீர் இருந்ததற்கான அடையாளமே இல்லை. ஆனாலும், அதிகாரிகள் உத்தரவின்படி நூறு நாள் திட்டப் பணியாளர்கள் மூலம் தினமும் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. மேலும், பல கிராமங்களில் நூறு நாள் வேலைத் திட்டம் மூலம் மரக்கன்றுகள் வளர்க்கப்படுவதாக கணக்கு எழுதப்படுகிறது. ஆனால், எங்குமே மரக்கன்றுகள் இல்லை. காலையில் வந்ததும் பணியாளர்கள் எண்ணிக்கை கணக்கெடுப்பு நடத்தப்பட்டவுடன் ஒருசில குழிகளில் மட்டும் தண்ணீர் ஊற்றப்படுகிறது. பிறகு பணியாளர்கள் ஓய்வு எடுக்கச் சென்று விடுகின்றனர். தண்ணீர் ஊற்றியும் மரக்கன்றுகள் வளராததற்கு என்ன காரணம் என அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. எனவே, அரசு மரக்கன்றுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் தண்ணீர் ஊற்றுவது பெயரளவில் மட்டுமே செய்யப்படுகிறது. இதனால் முறையாக மரக்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றவும், நூறு நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு நடப்பதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 50 லட்சம் மரக்கன்றுகள்:
 இதுகுறித்து நூறு நாள் வேலைத் திட்டத்தை கண்காணிக்கும் துறையான மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் கூறியதாவது:
 கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பையும், வருமானத்தையும் உறுதி செய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்டதுதான் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம். கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் அரசு நிலங்கள், சாலையோரங்கள், ஏரி, குளக்கரைகளில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நூறு நாள் வேலைத்திட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சென்னை தவிர்த்து, பிற மாவட்டங்களில் சுமார் 50 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
 ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை 4 மாதங்களுக்கு மட்டும்தான் பரவலாக மழை இருக்கிறது. மற்ற 8 மாதங்கள் 75 சதவீத கிராமங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு உள்ளது. பெரும்பாலான கிராமங்களில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத நிலையில், மரக்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது சவாலாக உள்ளது. இருப்பினும் ஊராட்சிகள் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளில் நீர் இருப்பு உள்ள இடங்களில் அடி பம்பு பொருத்தி தண்ணீர் எடுத்து மரக்கன்றுகளுக்கு ஊற்ற வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.
 - கே.விஜயபாஸ்கர்
 
 
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

தங்கம் விலை நிலவரம்: இன்று ஏறுமுகமா? இறங்குமுகமா? 
பெண் வயிற்றில் இருந்து 7 கிலோ கட்டியை அகற்றி கோவை மருத்துவர்கள் சாதனை
பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்பனை: 8 போ் கொண்ட கும்பல் கைது
அடையாள மொழியாக இந்தி இருக்க முடியாது: ராமதாஸ் பேட்டி
திமுகவால் இனி அதிமுகவை அசைத்துக்கூடப் பார்க்க முடியாது: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்