வியாழக்கிழமை 22 ஆகஸ்ட் 2019

உடல் உறுப்பு மாற்று அமைப்புகளை இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்

DIN | Published: 05th June 2019 02:46 AM


தமிழகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் வகையில் உடல் உறுப்பு மாற்று அமைப்புகளை இணைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். 
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு அறுவை சிகிச்சையில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாக மத்திய அரசு, தமிழகத்துக்கு விருது வழங்கி உள்ளது. ஏழை எளிய மக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை இலவசமாகச் செய்யப்படுகிறது.
இந்நிலையில், மத்திய அரசு 2014 நவம்பரில் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு ஒன்றை உருவாக்கியது. இப்போது, அனைத்து மாநிலங்களிலும் செயல்படும் உறுப்பு தான அமைப்புகளையும், தேசிய உறுப்பு மாற்று அமைப்புடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன. இவ்வாறு இணைத்தால், நாட்டிலேயே முதலிடம் வகிக்கும் தமிழகம் கடுமையாக பாதிக்கப்படும்.
மேலும், தேசிய அளவில் உடல் உறுப்பு தானம் பெறுவதற்கு பதிவு செய்து உள்ள நோயாளிகளையும், தமிழகத்தில் பதிவு செய்திருக்கும் நோயாளிகளையும் ஒன்றாக இணைத்து, உடல் உறுப்பு தானம் வேண்டுவோர் பட்டியல் உருவாக்கப்படும். இதனால் தமிழகத்தில் தானமாகக் கிடைக்கும் உடல் உறுப்புகளை இந்தியாவில் மற்ற மாநிலங்களில் பதிவு செய்துள்ள நோயாளிகளுக்குப் பொருத்துவதற்கு அனுப்பி வைக்கும் நிலை உருவாகும். தமிழகத்தில் பதிவு செய்திருக்கும் நோயாளிகளுக்கு உடல் உறுப்பு கிடைப்பது அரிதாகிவிடும். இதுபோல, தமிழக நோயாளிகளை தவிக்கவிட்டு, மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், வெளிநாட்டினரும் உடல் உறுப்பு தானம் பெறும் நிலைமையை ஏற்படுத்த பாஜக அரசு முயற்சிப்பது கண்டனத்துக்கு உரியதாகும். எனவே, இந்த முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ப.சிதம்பரம் கைது: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ நடவடிக்கை
சில இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
மௌனம் காக்கும் திமுக!: ப.சிதம்பரம் கைது
பொன்விழா காணும் அமெரிக்க துணைத் தூதரகம்
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்: வட்டி விகிதம் குறைப்பு