திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

ஜூன் 15, 16-இல் ஜவ்வாதுமலை கோடை விழா: விரிவான ஏற்பாடுகளைச் செய்ய ஆட்சியர் உத்தரவு

DIN | Published: 01st June 2019 01:20 AM


ஜவ்வாதுமலையில் ஜூன் 15, 16-ஆம் தேதிகளில் நடைபெறும் 22-ஆவது கோடை விழாவுக்கான விரிவான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் நடைபெறும் 22-ஆவது கோடை விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 


மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சு.ஜானகி, கோட்டாட்சியர்கள் மைதிலி (ஆரணி), ஸ்ரீதேவி (திருவண்ணாமலை), ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஜி.அரவிந்த், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பேசியதாவது: ஜவ்வாதுமலையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் கோடை விழா நிகழாண்டு ஜூன் 15, 16-ஆம் தேதிகளில் நடத்தப்படுகிறது. 

கோடை விழாவுக்கு வரும் பொதுமக்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் அந்தந்த துறையினர் ஏற்படுத்தித் தர வேண்டும்.
மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சி, போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை மூலம் சிறப்பான மலர் மற்றும் காய்கனி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஜவ்வாதுமலையில் விளையும் காய்கறிகள், பழங்கள், பயிர்கள் அடங்கிய விற்பனைச் சந்தை அமைக்க வேண்டும். 
மின்சார வாரியம் மூலம் கோடை விழா நடைபெறும் நாள்களில் தடையில்லா மின் விநியோகம் செய்ய வேண்டும். கோடை விழா அரங்கில் பல்வேறு விழிப்புணர்வுக் கலை நிகழ்ச்சிகள், மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்களை சிறப்பாக நடத்த வேண்டும்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், பாரம்பரிய உணவுத் திருவிழா, கொழு, கொழு குழந்தைகள் போட்டியை நடத்த வேண்டும். சமூக நலத் துறை, மகளிர் திட்டம், குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் பெண்களுக்கான கோலப்போட்டியை நடத்த வேண்டும்.
மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள், பாடல்கள், விளையாட்டுகள், உணவு வகைகள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இடம்பெறச் செய்ய வேண்டும். 

கோடை விழா நடைபெறும் 2 நாள்களும் அனைத்து அரங்குகளையும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்திருக்க வேண்டும் என்றார். கூட்டத்தில், அனைத்து அரசுத் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

ஆறுகள் மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை:  தமிழக முதல்வர் கே. பழனிசாமி உறுதி
சென்னை மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க ரூ.6 ஆயிரம் கோடியில் புதிய திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்
திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் தமிழகம்:  மு.க.ஸ்டாலின்
ஊதிய பட்டியலில் திருத்தம் செய்து ரூ. 86 லட்சம் மோசடி: துப்புரவு ஊழியர் பணியிடை நீக்கம்
பூரண மதுவிலக்கு கோரி குமரி அனந்தன் உண்ணாவிரதம்