தமிழ்நாடு

2,500 ஆண்டுகளுக்கு முந்தைய 3 சுவர்கள் கீழடி அகழாய்வில் கண்டெடுப்பு

31st Jul 2019 12:46 AM

ADVERTISEMENT


சிவகங்கை மாவட்டம்  கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 3 சுவர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. 
கீழடி கிராமத்தில் தமிழக அரசு சார்பில் 5-ஆம் கட்ட அகழாய்வு, கடந்த ஜூன் மாதம் 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 
ஏற்கெனவே மூன்று கட்ட அகழாய்வுகள் மத்திய அரசின் தொல்லியல் துறை மூலமும், நான்காம் கட்ட அகழாய்வு தமிழக அரசு சார்பிலும் மேற்கொள்ளப்பட்டன. 
இந்த ஆய்வின் போது, கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய நகர நாகரிகம் இருந்தது தெரியவந்தது. 
அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளில் பழங்கால மக்கள் பயன்படுத்திய பானைகள், ஓடுகள், அழகு சாதனப் பொருள்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.
 இதைத் தொடர்ந்து, முருகேசன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் குழி தோண்டியபோது இரட்டைச் சுவர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இந்த சுவருக்கு அருகிலேயே 5 அடுக்குகள் கொண்ட 4 அடி உயர உறைகிணறு கண்டறியப்பட்டது. 
இந்நிலையில், இந்தக் கிணறுக்கு அருகிலேயே தோண்டப்பட்ட குழியில் 5 அடி நீளத்திலும் 3 அடி அகலத்திலும் ஒரு சுவர் கண்டுபிடிக்கப்பட்டது.
மற்றொரு குழியில் அகலமான நிலையில் ஒரு சுவர் இருப்பது தெரிந்தது. 
போதகுரு என்பவருக்கு சொந்தமான நிலத்தில் குழி தோண்டியபோது 2 அடி அகலத்திலும் ஒரு அடி உயரத்திலும், 12 அடி நீளத்திலும் மற்றொரு சுவர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
5 அடி நீளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுவரில் 3 அடுக்குகளில் செங்கல்கள் அடுக்கி கட்டப்பட்டுள்ளன. 
கடந்த இரு நாள்களில் கீழடி அகழாய்வில் உறைகிணறும் அடுத்தடுத்து சுவர்களும் கண்டறியப்பட்டுள்ளன.
தற்போது கண்டறியப்பட்டுள்ள சுவர்கள் 2,500 ஆண்டுகளுக்கு முந்தையது எனவும்,  இவை கோட்டை சுவர்களா அல்லது அரண்மனை சுவர்களா என்பதை அதன் தொடர்ச்சி சுவர்கள் கிடைத்தால்தான் உறுதியாகச் சொல்ல முடியும் என அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT