தமிழ்நாடு

விலையில்லாத மிதிவண்டிகள் திட்டம் தொடரும்: தமிழக அரசு உறுதி

31st Jul 2019 01:18 AM

ADVERTISEMENT


தமிழகத்தில் விலையில்லாத மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 
நிகழ் நிதியாண்டில் இந்தத் திட்டம் தொடர்வது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்தன. இந்த நிலையில், மிதிவண்டிகள் அளிக்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட விளக்க அறிக்கை: மேல்நிலைக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லாமல் மிதிவண்டிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. 
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட , சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின வகுப்புகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு பொருளாதார உச்ச வரம்பின்றி விலையில்லாத மிதிவண்டிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை எவ்வளவு: கடந்த இரண்டு நிதியாண்டுகளுக்கும் சேர்த்து மொத்தமாக 10 லட்சத்து 87 ஆயிரத்து 147 மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்துக்காக நிகழ் நிதியாண்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு ரூ.73 கோடியும், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத் துறைக்கு ரூ.65.48 கோடியும் என மொத்தம் ரூ.138.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விலையில்லாத மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், பிளஸ் 1 வகுப்புப் பயிலும் அனைத்து  மாணவ, மாணவியருக்கும் தொடர்ந்து மிதிவண்டிகள் வழங்கப்படும். இந்தத் திட்டமானது இனிவரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் விலையில்லாத மிதிவண்டிகள் திட்டம் நிறுத்தப்பட இருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து அரசு இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT