தமிழ்நாடு

தேசிய மருத்துவ ஆணையத்துக்கு எதிர்ப்பு: தனியார் மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தம்

31st Jul 2019 01:33 AM

ADVERTISEMENT


இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் புதன்கிழமை காலை முதல் வியாழக்கிழமை காலை (ஆகஸ்ட் 1) வரை 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது. 
இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையத்தை  மத்திய அரசு அமைக்க உள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய மருத்துவர் சங்கம் நாடு முழுவதும் புதன்கிழமை காலை 6 மணியில் இருந்து வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) காலை 6 மணி வரை 24 மணி நேரம் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய மருத்துவர் சங்கத்தின் தமிழகத் தலைவர் எஸ்.கனகசபாபதி கூறியது:  தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வருவதற்கு அனைத்து தரப்பினரும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், மத்திய அரசு ஆணையத்துக்கான மசோதாவை  நிறைவேற்றியுள்ளது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டால் மருத்துவத் துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதுடன் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படும்.
எனவே, இந்த ஆணையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் புதன்கிழமை காலை 6 மணியில் இருந்து வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) காலை 6 மணி வரை  24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் சுமார் 1 லட்சம் மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர். நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சைப் பிரிவுகளில் மருத்துவர்கள் பணியாற்றுவர். புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் இயங்காது. எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மருத்துவ மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணிக்க உள்ளனர் என்றார். 
இந்த வேலை நிறுத்தத்தால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைபெறும் உள்நோயாளிகள், புறநோயாளிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்காமல் ஆதரவு மட்டும் தெரிவிப்பதால் அரசு மருத்துவமனைகள் வழக்கம்போல் செயல்பட உள்ளது.  
 

ADVERTISEMENT
ADVERTISEMENT