தமிழ்நாடு

தேசிய துப்பாக்கி சுடும் போட்டி: அஜித் பங்கேற்பு

31st Jul 2019 12:44 AM

ADVERTISEMENT


கோவையில் நடைபெறவுள்ள தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்கிறார். 
 தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக விளங்கும் அஜித்துக்கு ரசிகர் மன்றங்கள் இல்லை. பத்திரிகை, ஊடகங்களுடன் சந்திப்பு இல்லை என்ற போதிலும், அவருக்கான தனி இடம் வேறு எந்த நடிகருக்கும் இல்லாத ஒன்று. 
அஜித் சினிமாவில் நடிப்பதோடு மட்டும் அல்லாமல் சிறிய ரக விமானங்களை உருவாக்குவது, பைக் ரேஸ், கார் பந்தயம், துப்பாக்கி சுடுதல் போன்ற துறைகளில் ஆர்வமாக ஈடுபடுபவர். சமீபகாலமாக துப்பாக்கி சுடுதலில் அதிக ஆர்வம் காட்டும் அஜித், கோவையில் நடைபெற இருக்கும் தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன் போட்டியில் கலந்துகொள்ள இருப்பதாக செய்தி   வெளியாகியுள்ளது. இந்த வார இறுதியில் இப்போட்டி நடைபெற இருக்கிறது. அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர்கள் இதில் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
 கடந்த பொங்கல் பண்டிகை அன்று வெளியான அஜித்தின் விஸ்வாசம் படம், அவரது சினிமா வாழ்க்கையிலேயே அதிக வசூலை ஈட்டிய படமாக அமைந்துள்ளது. அதைத் தொடர்ந்து, அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களின் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரித்திருக்கிறார். இந்த நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை தனது சுட்டுரை பக்கத்தில்  வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியீட்டை நோக்கி பணியாற்றிய நேர்கொண்ட பார்வை குழுவுக்கு மிகப் பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் அடுத்த படமாக அஜித் 60, அஜித் குமார், எச்.வினோத்துடன் அறிவிப்பதில் மகிழ்ச்சி என போனி கபூர் பதிவிட்டுள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியில் அஜித் நடிக்கவுள்ளார் என முன்னரே செய்திகள் வெளியாகி வந்தாலும், தற்போது அதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT