தமிழ்நாடு

ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணிக்கக் கூடாது: ராமதாஸ்

31st Jul 2019 01:34 AM

ADVERTISEMENT


ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மீண்டும் புறக்கணிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ச. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை அடையாறில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அதன் வைரவிழா நிறைவுக் கொண்டாட்டங்கள் தொழில்நுட்பக் கல்வி நிறுவன வளாகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற உள்ளன. இதற்காக அழைப்பிதழில் இடம்பெற்றுள்ள நிகழ்ச்சி நிரலின்படி, வைரவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படாது என்று உணர்த்தப்பட்டிருக்கிறது. 
விழாவின் தொடக்கத்தில் 3 நிமிடங்களுக்கு வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படும் என்றும், விழாவின் நிறைவில் தேசிய கீதம் பாடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக எந்தக் குறிப்பும் இல்லாததால், அந்தப் பாடல் இசைக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.  வரலாற்று சிறப்பு மிக்க வைரவிழாவில்  தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுவது தமிழுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அவமதிப்பாகும்.
கடந்த ஆண்டு பிப்ரவரி  26-ஆம் தேதி அப்போதைய கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்ட விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டு, அதற்கு பதிலாக மகாகணபதி என்று தொடங்கும் சம்ஸ்கிருத பாடல் பாடப்பட்டது. 
அதற்கு, கடும் எதிர்ப்பு எழுந்தது. அப்போது, இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, சம்ஸ்கிருத பாடலை பாட ஐஐடி நிர்வாகம் ஏற்பாடு செய்யவில்லை. மாணவர்களே தாமாக வந்து பாடினர் என்று ஏற்றுக்கொள்ள முடியாத விளக்கத்தை அளித்தார்.  ஆனால், கடந்த ஆண்டு அளித்த வாக்குறுதிக்கு மாறாக, இப்போது மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுகிறது என்றால், அது அறியாமல் நடந்த தவறு இல்லை. திட்டமிட்டு இழைக்கப்படும் அவமதிப்பு என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. 
தமிழகத்தில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவன வளாகம் தமிழுக்கும், தமிழர்களின் உணர்வுகளுக்கும் எதிராக செயல்படுவதை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT