தமிழ்நாடு

ஈரோடு புத்தகத் திருவிழா ஆகஸ்ட் 2-இல் தொடக்கம்: ஸ்டாலின் குணசேகரன் தகவல்

31st Jul 2019 01:55 AM

ADVERTISEMENT


மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடத்தப்படும் ஈரோடு  புத்தகத் திருவிழா வரும் ஆகஸ்ட் 2-இல் தொடங்கி 13-ஆம் தேதி வரை 12 நாள்கள் நடைபெறவுள்ளது. 
 இதுகுறித்து மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: 
மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் 15-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் ஆகஸ்ட் 2-ஆம் தேதி தொடங்குகிறது. வரும் 13-ஆம் தேதி வரை 12 நாள்கள் நடைபெறும்.    இந்தப் புத்தகத் திருவிழாவில், தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு புத்தக வெளியீட்டாளர்கள், விற்பனையாளர்களுடன் இந்தியாவின் முக்கியப் பதிப்பகங்களும் கலந்துகொள்கின்றன. இதற்காக 230 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்காகக் குவிக்கப்பட  உள்ளன. 
 உலகெங்கும் உள்ள தமிழ்ப் படைப்பாளிகளின் படைப்புகளை விற்பனை செய்வதற்கென உலகத் தமிழர் படைப்பரங்கம், புதிய புத்தகங்களை வெளியிட விரும்புவர்களுக்கென புத்தக வெளியீட்டு அரங்கம், மக்களை சிந்திக்கத் தூண்டும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், படைப்பாளர்கள் வாசகர்களைச் சந்திக்கும் சிறப்பு மேடை, படைப்பாளர் பாராட்டு நிகழ்வுகள், ஈரோடு மாவட்ட படைப்பாளர் அரங்கம் போன்றவை பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. தினமும் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும் இந்தப் புத்தகத் திருவிழாவைக் காண நுழைவுக் கட்டணம் இல்லை.     
 ஆகஸ்ட் 2-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் தொடக்க விழா நிகழ்வுக்கு தேசிய நல விழிப்புணர்வு இயக்கத் தலைவர் எஸ்கேஎம்.மயிலானந்தன் தலைமை வகிக்கிறார். மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரையாற்றுகிறார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.பாலமுரளி வாழ்த்திப் பேசுகிறார்.   மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் உலகத் தமிழர் படைப்பரங்கினைத் திறந்துவைத்து பேசுகிறார்.  சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன் புத்தக அரங்கினைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். இந்த புத்தகத் திருவிழாவை மக்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT