தமிழ்நாடு

அதிமுகவிடம் இருந்து சிறுபான்மை மக்களை பிரிக்க முடியாது: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

31st Jul 2019 02:22 AM

ADVERTISEMENT


அதிமுகவையும், சிறுபான்மை மக்களையும் பிரித்து விடலாம் என்று ஸ்டாலின் மேற்கொண்டுள்ள சூழ்ச்சி ஒருபோதும் நிறைவேறாது என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:
வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், அதிமுகவுக்கு புதியவரல்ல. இந்தக் கட்சி தொடங்கப்பட்டது முதலே இணைந்து பணியாற்றுபவர். ஆரணியைச் சேர்ந்தவராக இருந்தாலும் எம்ஜிஆரால் சென்னை மாவட்டச் செயலராக அப்போதே நியமிக்கப்பட்டவர்.
அதிமுகவில் மட்டும்தான் ஒரு தொண்டனும் முதல்வராக, அமைச்சராக உயர் பதவிகளுக்கு வரமுடியும். 1983-இல் சாதாரண வார்டு செயலராக இருந்த நான், தற்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ளேன். முதல்வராக இருந்துள்ளேன். எடப்பாடி பழனிசாமி முதல்வராக உள்ளார். ஆனால், திமுக உள்பட எந்த ஒரு கட்சிகளிலும் அப்படி வரமுடியாது. 
திமுகவில் கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், அவருக்கு பிறகு தற்போது உதயநிதி ஸ்டாலின் வந்துவிட்டார். அந்த வகையில், அதிமுக மட்டுமே மக்களாட்சி தத்துவத்தின்படி இயங்கிக் கொண்டுள்ளது. அதனால், இந்தக் கட்சி வீழ்ந்தாலும் எழும்.
ஆனால், ஸ்டாலின் உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகளை மக்களிடம் தெரிவித்து கடந்த தேர்தலில் வெற்றி பெற்றார். அது தாற்காலிகமான வெற்றிதான். எனினும், தமிழகத்தை ஆளும் பொறுப்பை மக்கள் அதிமுகவுக்குத்தான் அளித்துள்ளனர். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ஸ்டாலின் கூறியது நடக்கவில்லை. அதனால், தற்போது அதிமுக அரசில் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 28 ஆயிரம் கோடி நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறிக்கொண்டுள்ளார்.
எந்த ஒரு திட்டம் என்றாலும் அதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டு, ஒரு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளி வழங்கப்படுவது வழக்கம். இடையில் வழக்கு உள்ளிட்ட பல காரணங்களால் ஒப்பந்த காலத்துக்குள் முடிக்கப்படாத திட்டங்களில் மீதமுள்ள நிதி திரும்பவும் அரசு கஜானாவுக்கு அனுப்பப்படும். பின்னர், அடுத்த ஆண்டு மீண்டும் அந்த நிதி அதே திட்டங்களுக்கு செலவிடப்படும். இது எந்த ஆட்சியிலும் நடப்பதுதான். அதன்படி, திமுக ஆட்சியிலும் அப்போதைய பட்ஜெட்டுக்கு ஏற்ப ரூ. 8,848 கோடி நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. 
அந்தவகையில், குறிப்பிட்ட நிதி திரும்பப் பெறப்பட்டுள்ள நிலையில் ஏதோ முறையாக செலவிடப்படாததால்தான் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி மக்களை குழப்பி வருகிறார். அவர் எப்படியும் தமிழக முதல்வராக வேண்டும் என்று பகல் கனவு கண்டு கொண்டுள்ளார். அது எந்தக் காலத்திலும் நடக்காது. இதுதான் மக்கள் தீர்ப்பாகும். திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டும், சட்டம்-ஒழுங்கும் சீர்கெட்டு இருந்தது. ஆனால், அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக மாறியுள்ளது. 
இந்த அரசு சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் பாதுகாப்பு அளிக்கும் அரசாக விளங்கிக் கொண்டுள்ளது. உலமாக்கள் நிதியுதவியை ஆயிரத்திருந்து ரூ.1,500-ஆகவும், ரமலான் மாதத்தில் 3 ஆயிரம் மசூதிகளுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க 4,500 மெட்ரிக் டன் அரிசி இலவசமாகவும், ஹஜ், ஜெருசலேம் புனித பயணத்துக்கான மானியத்தையும் உயர்த்தி வழங்கி வருகிறது. 
இதுதவிர, இஸ்லாமிய மகளிர் நலனுக்காக இணை மானியமும் அளித்து வருகிறது. இத்தகைய நிலையில், அதிமுகவையும், சிறுபான்மை மக்களையும் பிரித்துவிடலாம் என்று ஸ்டாலின் மேற்கொண்டுள்ள சூழ்ச்சி ஒருபோதும் நிறைவேறாது என்றார் அவர்.
கூட்டத்தில், தமிழக அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், கருப்பணன், கே.சி.வீரமணி, ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பேர்ணாம்பட்டு பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர்கள் பி. தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சரோஜா, துரைக்கண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT