தமிழ்நாடு

மருத்துவ குணம் மிக்க, தனித்துவம் வாய்ந்த கொடைக்கானல் மலைப் பூண்டுக்கு புவிசார் குறியீடு

30th Jul 2019 02:46 PM

ADVERTISEMENT


கொடைக்கானல் மலைப் பகுதியில் விளைவிக்கப்படும் மிகவும் தனித்துவம் வாய்ந்த மருத்துவ குணம் மிக்க மலைப் பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் விளையும் இந்த மலைப் பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பதன் மூலம், வேறு எந்த பூண்டு வகையையும் மலைப் பூண்டு என்று அழைக்கவோ, விற்பனை செய்யவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

கொடைக்கானலில் விளையும் மலைப் பூண்டு, அதன் மருத்துவக் குணத்தால் உலகப் புகழ்பெற்றது. தற்போது மலைப் பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருப்பதன் மூலம், தமிழகத்தில் உற்பத்தியாகும் மதுரை மல்லி, நீலகிரி டீ, ஈரோடு மஞ்சள் உட்பட புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடகாவில் விளையும் 42 பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றிருக்கும் நிலையில், இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இன்னும் பல பொருட்கள் புவிசார் குறியீடு பெற தகுதியான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

கொடைக்கானலில் விளையும் சாம்பல் நிறத்திலான மலைப் பூண்டுக்கு ஒரு தனித்துவம் உள்ளது. அது கொடைக்கானல் மண்ணின் தரம், மலையின் அமைப்பு, தட்பவெப்ப நிலை ஆகியவை காரணமாக வேறு எங்கும் இதுபோன்ற பூண்டு விளையாது என்று கூறப்படுகிறது.

ஆஸ்துமா, தலைவலி, உடல் வலி, ஜீரணக் கோளாறு, வாயுக் கோளாறு என பல்வேறு உடல் நலப் பிரச்னைகளுக்கும் இந்த பூண்டு அருமருந்தாக உள்ளது என்று சொன்னால் அது மிகையில்லை.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT