தமிழ்நாடு

வேலூர் தேர்தல்: இதுவரை ரூ.3.44 கோடி பறிமுதல்: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

30th Jul 2019 01:17 AM

ADVERTISEMENT


வேலூர் மக்களவைத் தேர்தலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.44 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அளித்த பேட்டி:-
வேலூர் மக்களவைத் தேர்தலை ஒட்டி, பாதுகாப்புப் பணிகளுக்கென இதுவரை 19 கம்பெனி துணை ராணுவப் படை வந்துள்ளது. 
உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் ரொக்கப் பணத்தை வாகனச் சோதனைகளின்போது அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், இதுவரை ரூ.3.44 கோடி ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்டது கண்டறியப்பட்டு பறிமுதல் ஆகியுள்ளது.
தேர்தல் தொடர்பாக இதுவரை எந்த அரசியல் கட்சியும் புகார் எதுவும் வழங்கவில்லை. தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளன.
அந்தத் தொகுதிகளுக்கு ஆறு மாதங்களுக்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் தேர்தலை நடத்த தயாராக உள்ளோம் என்றார் சத்யபிரத சாகு.
கருத்து கணிப்புகள்: இதனிடையே, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட அறிக்கையில், கருத்துகள் கணிப்புகள் வெளியிடுவது தொடர்பான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். 
அதன்படி தேர்தல் பிரசாரம் நிறைவடைந்து  வாக்குப் பதிவு நிறைவடையும் வரையிலான காலம் வரையில் கருத்து கணிப்புகள் தொடர்பான முடிவுகள் எதையும் வெளியிடக் கூடாது என தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT