உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, லோக் ஆயுக்த உறுப்பினர்கள் இரண்டு பேரின் நியமன ஆணையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திங்கள்கிழமை வழங்கினார்.
லோக் ஆயுக்த அமைப்பின் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ராஜாராம், கே.ஆறுமுகம் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் லோக் ஆயுக்த நியமனங்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், லோக் ஆயுக்த அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த நியமனம், சட்டத்துக்குப் புறம்பாகச் செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் லோக் ஆயுக்த உறுப்பினர்கள் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு எதிராக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் லோக் ஆயுக்த செயல்படவில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களுக்குப் பின் லோக் ஆயுக்த உறுப்பினர்கள் நியமனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கிய உத்தரவிட்ட நீதிபதிகள், லோக் ஆயுக்த தொடர்பான வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டனர்.
இருவருக்கும் நியமன உத்தரவு: சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியதைத் தொடர்ந்து, லோக் ஆயுக்த அமைப்பின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்த எம்.ராஜாராம், கே.ஆறுமுகம் ஆகியோருக்கான பதவி நியமன உத்தரவுகளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திங்கள்கிழமை வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில், ஆளுநரின் தனிச் செயலாளர் ஆர்.ராஜகோபால், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் எஸ். ஸ்வர்ணா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.