தமிழ் மொழியின் தொன்மை குறித்து பிளஸ் 2 பாடநூலில் தவறான தகவல் இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு 13 நூலாசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், பாடநூலில் தவறாக அச்சிடப்பட்டது தொடர்பாக 3 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் வெளியான பிளஸ் 2 வகுப்புக்கான ஆங்கில பாடப்புத்தகத்தில் தமிழ் மொழியின் தொன்மை குறித்து தவறான தகவல் இடம்பெற்றிருந்தது. பக்கம் எண் 142-இல் மொழிகளின் தொன்மை வரலாற்றை குறித்து படமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ் மொழி கி.மு.300 ஆண்டு பழமையானது என்றும், சம்ஸ்கிருதம், சீனம், கிரேக்கம், லத்தீன் ஆகிய மொழிகள் தமிழை விட தொன்மையான மொழிகள் என்றும் அச்சிடப்பட்டிருந்தது.
இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், க. பாண்டியராஜன் ஆகியோர், பாடப்புத்தகத்தை தயாரித்த நூலாசிரியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
இந்த நிலையில், பிளஸ் 2 ஆங்கில பாடநூலாசிரியர்கள் 13 பேருக்கு தமிழ்நாடு கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த 13 பேரில் 9 பேர், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் பாடநூலில் இந்த தவறு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தங்களுடைய விளக்கங்களை, அந்தத் துறை இயக்குநருக்கு 3 நாள்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களின் விளக்கத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் மொழி குறித்து தவறான தகவல் இடம்பெற்ற பாடப்பகுதி மாணவர்களுக்கு நடத்தப்பட மாட்டாது என்றும், அந்தப் பகுதி முழுமையாக நீக்கப்படும் எனவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.