குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக, மாதவராவ், சீனிவாச ராவ், உமா சங்கர் குப்தா ஆகியோருக்கு சொந்தமான ரூ.246 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
தமிழகத்தில் தடை விதிக்கப்பட்ட குட்கா, போதைப் பாக்குகள் விற்பனையை லஞ்சம் பெற்றுக்கொண்டு சில உயரதிகாரிகள் அனுமதித்தனர். இந்நிலையில், கடந்த 2016-இல் வருமானவரித் துறையினர், சென்னை அருகே செங்குன்றத்தில் உள்ள ஒரு குட்கா கிடங்கியில் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில், அங்கு கிடைத்த ரகசிய டைரியில் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சென்னை காவல்துறை ஆணையராகவும், பின்னர் தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற தே.க.ராஜேந்திரன், சென்னை பெருநகர காவல்துறை முன்னாள் ஆணையரும், ஓய்வு பெற்ற டிஜிபியுமான எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட பல காவல்துறை உயரதிகாரிகள், கலால் துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சிபிஐ வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கிறது. இந்நிலையில், வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி தே.க.ராஜேந்திரன், ஓய்வு பெற்ற டிஜிபி ஜார்ஜ் ஆகியோர் வீடு உள்பட 35 இடங்களில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும் இந்த வழக்குத் தொடர்பாக சம்பந்தப்பட்ட கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, மத்திய கலால்துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அமலாக்கத் துறை வழக்கு: இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரிடம் கடந்த டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, காவல்துறை உயரதிகாரிகளிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதேவேளையில், இந்த வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இதனால், அமலாக்கத் துறையினரும் தனியாக ஒரு வழக்கைப் பதிவு செய்து, விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முதலில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்த லஞ்ச ஒழிப்புத் துறையைச் சேர்ந்த விசாரணை அதிகாரியிடம் சிபிஐ அதிகாரிகள் அண்மையில் விசாரணை செய்தனர்.
ரூ.246 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத் துறையின் விசாரணையில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2016-ஆம் ஆண்டு வருமானவரித் துறை சோதனை நடத்திய தேதிக்கு முன்பு வரை சம்பந்தப்பட்ட கிடங்கில் இருந்து குட்கா தயார் செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ளதும், அதில் இருந்த கிடைத்த சட்டவிரோதமான ரூ.639.40 கோடி பணத்தை தமிழகம், ஆந்திரம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வேறு தொழில்களிலும், சொத்துக்களிலும் முதலீடு செய்திருப்பதும், அந்தச் சொத்துக்களை தனது உறவினர்கள், ஊழியர்கள் பெயரில் வாங்கியிருப்பதும் அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்தது.
தங்களது குட்கா தொழிலை இடையூறு இல்லாமல் செய்வதற்கு மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு பெரும் தொகை லஞ்சமாக வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. குட்கா மூலம் கிடைத்த பெருமளவு பணம் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழிலிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளதையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த நிலையில், குட்கா கிடங்கை நடத்தி வந்த மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா ஆகியோருக்குச் சொந்தமான ரூ.246 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியது. தமிழகம், ஆந்திரம், புதுச்சேரியில் இந்தச் சொத்துக்கள் உள்ளன. இதில் 243.80 கோடி மதிப்புள்ள 174 அசையாச் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அதேபோல, ரூ.2.29 கோடி மதிப்புள்ள 3 பேருக்கும் சொந்தமான வாகனங்களும் முடக்கப்பட்டுள்ளன. சொத்து முடக்க நடவடிக்கை தொடரும் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.