தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளில் ஆயிரம் நூல்கள் கொண்ட நூலகங்கள் கட்டாயம்: பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

30th Jul 2019 02:47 AM

ADVERTISEMENT


அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் குறைந்தபட்சம் 1,000 நூல்கள் கொண்ட நூலகங்களை கட்டாயமாக ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். 
இது தொடர்பாக அவர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்,  மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாணவர்கள் தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தால் அவர்களின் அறிவு வளரும். காலச் சூழ்நிலைக்கேற்ப கல்வி மாற்றமடைகிறது. அதனால் மாணவர்கள் பாடநூல்கள் மட்டுமல்லாது, பாடத்தோடு தொடர்புடைய நூல்களை கற்கும்போது மாணவர்களின் அறிவு பெருகும் என்பதால், பள்ளிகளில் நூலகங்கள் அமைத்து மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 
குறைந்தபட்சம் 1,000 நூல்கள்... பள்ளிக் கல்வித் துறையின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலான பள்ளிகளில் நூலகம் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளது. நூலகம் இல்லாத பள்ளிகளில் மிகுதியாக உள்ள ஒரு அறையினை நூலக அறையாக மாற்றி,  பள்ளி நூலகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ஒவ்வொரு அரசு,  அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் குறைந்தது 1,000 புத்தகங்கள் உள்ள பள்ளி நூலகம் செயல்பட வேண்டும். இந்த நூலகத்துக்கு, தினமும் குறைந்தபட்சம் தமிழ் மற்றும் ஆங்கில தினசரி செய்தித்தாள் ஒன்றை வாங்கி, மாணவர்கள் பயன்படுத்த வேண்டும். இந்த நூலகப் பணியினை மேற்கொள்ள ஒரு ஆசிரியரை நியமித்து, மாணவர்கள் நூலகத்தைப் பயன்படுத்தும் திறனை அதிகரிக்கலாம். இதன் மூலம் மாணவர்களின் பேச்சுத் திறன், எழுத்துத்திறன், 
ஆங்கிலம் பேசும் திறன், வாசிப்புத் திறன் ஆகியவை மேம்படும். 
மிகையாக உள்ள நாற்காலி, மேஜைகளை...: பள்ளிகளில் பயன்பாட்டுக்கு மிகையாக உள்ள நாற்காலி, மேஜை ஆகியவற்றை பள்ளி நூலகத்துக்குப் பயன்படுத்தலாம். ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு பள்ளிகளுக்குத் தேவையான நூல்கள் வாங்கப்பட்டுள்ளன. நூலகத்தில் உள்ள நூல்களை படிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் படிக்கும் வாய்ப்பினை அளித்து மாணவர்களின் அறிவுக்கூர்மையை மேம்படுத்த வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளை பார்வையிடும்போது பள்ளி நூலக செயல்பாட்டினை பார்வையிட்டு இந்தச் செயல்பாடுகள் அனைத்துப் பள்ளிகளிலும் முனைப்புடன் தினமும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT