தமிழ்நாடு

வடபழனி பணிமனையில் பேருந்து மோதி சுவர் இடிந்ததில் 2 ஊழியர்கள் பலி

29th Jul 2019 04:29 AM

ADVERTISEMENT

 


சென்னை: சென்னை வடபழனி பேருந்து பணிமனையில் உள்ள ஓய்வறை சுவரில் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் உள்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள பேருந்து நிலையம் அருகில் போக்குவரத்துப் பணிமனையும் செயல்பட்டு வருகிறது.  இங்கு சனிக்கிழமை இரவு  பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தன.  ஓட்டுநர்கள்,  நடத்துநர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் நள்ளிரவு 12.40 மணியளவில் தங்களது பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.  

போக்குவரத்து பணிமனையில் பழுது பார்ப்பதற்காக தனியாக இடம் உள்ளது. அங்கு கொண்டு சென்று பேருந்தை நிறுத்திய பிறகு தொழிலாளர்கள் அந்தப் பேருந்தை பழுது பார்ப்பது வழக்கம். இதற்காக ஓட்டுநர்  பாலமுருகன் பேருந்தை பழுது பார்க்கும் பகுதிக்குக் கொண்டு சென்றார். 

ADVERTISEMENT

சுவரில் மோதி விபத்து:  அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி அங்கிருந்த ஓய்வு அறையில் மோதி நின்றது.  இதில் தொழிலாளர்கள் தங்கும் ஓய்வு அறையின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் 8 பேர் சிக்கினர். இது குறித்து போலீஸாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் கே.சேகர் (49), பி.பாரதி (33) ஆகிய இரு ஊழியர்கள் உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்த எஸ்.மாசிலாமணி (49), டி.யுவராஜ் (43), ஆர்.பட்டுசாமி (38), ஏ.பாலமுருகன் (37), எஸ்.தணிகைவேல் (41),  எம்.காலிசா (47) ஆகிய 6 பேர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர். 

விபத்தில் பலியான பாரதி விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்தவர். இவர், இளநிலை தொழில்நுட்பப் பணியாளர். இவருக்கு திருமணமாகி 24 நாள்களே ஆகின்றன.  உயிரிழந்த மற்றொரு தொழிலாளி சேகர் சென்னை சாலி கிராமம் பகுதியைச் சேர்ந்தவர். முதுநிலை தொழில்நுட்பப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். 

அதிகாரிகள் ஆய்வு:  இந்த விபத்து குறித்து போக்குவரத்துத் துறைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், போக்குவரத்துக் கழக  மேலாண்மை இயக்குநர் க.கணேசன், இணை நிர்வாக இயக்குநர் இளங்கோ ஆகியோர் விபத்து நடந்த பணிமனையில் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தனர்.  
அப்போது அவர்களிடம்,  "சென்னையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக்கழக பணிமனைகளில் போதிய பாதுகாப்பு வசதி இல்லை என்றும், பேருந்துகளைப் பராமரிப்பதற்கு தேவையான உதிரிப் பாகங்கள் இல்லை' எனவும் தொழிலாளர்கள் பல்வேறு புகார்களைத் தெரிவித்தனர். 

விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் கைது:  இந்நிலையில், விபத்துக்குக் காரணமான ஓட்டுநர் பாலமுருகன் கைது செய்யப்பட்டார். பணியில் கவனக்குறைவாக இருந்து மரணம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பணியாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்: பேருந்துகள் 4 மணி நேரம் ஓடவில்லை

சென்னை வடபழனி பேருந்து பணிமனையில் உரிய பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணி நேரம் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

சென்னை வடபழனி பேருந்து பணிமனையில் விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஞாயிற்றுக்கிழமை காலை பொதுமக்கள், போக்குவரத்து ஊழியர்கள் அங்கு குவியத் தொடங்கினர். 

அரசு உரிய முறையில் பராமரிப்புச் செய்யாததன் காரணமாக இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளது. தமிழக போக்குவரத்துத்துறை இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என ஊழியர்கள் குற்றஞ்சாட்டினர். 

மேலும்,   ஊழியர்களுடன் ஆலோசித்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். பராமரிப்புப் பணிகள் முறையாக செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் இறந்த ஊழியர்களுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாகவும் வடபழனி போக்குவரத்து ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். 

இதனால் வடபழனி பேருந்து பணிமனையிலிருந்து பேருந்து எதுவும் காலை முதல் இயக்கப்படவில்லை. 

அதன்பின் ஊழியர்களிடம் போக்குவரத்து மேலாண்மை இணை இயக்குநர் இளங்கோவன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

மேலும், வடபழனி பணிமனையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த ஊழியர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும், காயமடைந்த ஊழியர்கள் பணிக்குத் திரும்பும் வரை சிறப்பு விடுப்புகள் உள்ளிட்ட சலுகைகள் அளிக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். கோரிக்கை ஏற்கப்பட்டதை அடுத்து  பேருந்துகள் இயக்கப்பட்டன. 

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு

சென்னை, ஜூலை 28: வடபழனி பணிமனை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

சென்னை வடபழனி பணிமனையில் சனிக்கிழமை நள்ளிரவு பேருந்து மோதியதில் சுவர் இடிந்து  விபத்து ஏற்பட்டது. இதில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்ததோடு, 6 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்தித்து போக்குவரத்து செயலர் ராதாகிருஷ்ணன் நலம் விசாரித்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழ்நாடு முழுவதும் உள்ள 322 பணிமனைகள் வாயிலாக சுமார் 21 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பணிமனைகள் மற்றும் பணியாளர்கள் தங்கும் அறைகள் குறித்து உரிய ஆய்வும், பாதுகாப்பு தணிக்கையும் மேற்கொள்ளுமாறு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தது. சென்னையில் உள்ள 32 பணிமனைகளில் 16 பணிமனைகள் முதற்கட்டமாக மேம்படுத்தப்பட உள்ளன. மேலும் 74 புதிய பணிமனைகள் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் அமைக்கப்பட்டு, அனைத்து பணிமனைகளும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மேம்படுத்தப்படும். 

பேருந்துகளின் தரத்தை பொருத்தவரை, கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஏறத்தாழ 3,900 பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டுள்ளன. 2,000 புதிய பேருந்துகள் இந்த ஆண்டின் இறுதிக்குள்ளாகவே இயக்கப்படும். மேலும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல கே.எப்.டபிள்யு எனும் ஜெர்மன் நாட்டு நிறுவனத்தின் உதவியோடு 12 ஆயிரம் பேருந்துகள் வாங்க ஆவன செய்யப்படும். இவ்வாறு திட்டமிடப்பட்ட வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டால் 80 சதவீதம் பேருந்துகள் புதியதாகிவிடும். அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர்கள் இரவு, பகல் பாராமல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். 

இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாதவாறு வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். மேலும் போக்குவரத்துக் கழகத்தின் விதிமுறையின்படி உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விபத்து குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று அவரது பொது நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் கிடைப்பதற்கு ஆவன செய்யப்படும். இதே போல் காயமடைந்த அனைவருக்கும் தரமான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT