தமிழ்நாடு

பழனி அருகே மலைப்பகுதியில் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுச் சின்னம்

29th Jul 2019 12:55 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி பொன்னிமலை சித்தன் மலைப் பகுதியில் சுமார் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுச் சின்னம் கண்டறியப்பட்டுள்ளது.  

ஆயக்குடி பொன்னிமலை சித்தன் மலையின் கரட்டுப் பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, முன்னாள் எம்பி ராஜா ரவிவர்மா, பழனியாண்டவர் கல்லூரி பண்பாட்டுத் துறை பேராசிரியர் அசோகன், ஆய்வு மாணவர்கள் திருவேங்கடம், செல்வராஜ் உள்ளிட்டோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.  

அப்போது மலையின் தென்கிழக்கு பகுதியில் பிரம்மாண்ட அளவிலான பெருங்கற்கால கல்திட்டை எனப்படும் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர். பெரிய அளவிலான 3 பாறைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்துள்ளது போல இது அமைந்துள்ளது. இறந்தவர்கள் நினைவாக, புதைத்த இடத்திலோ அல்லது வேறு பகுதியிலோ இதுபோன்ற நினைவுச் சின்னங்கள் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து நாராயணமூர்த்தி கூறியது: இதே பகுதியில் சங்க காலத்தில் ஆய்வேளிர் என்ற இனம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.  தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த கல்திட்டை சுமார் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களால் நிறுவப்பட்டுள்ளது.  அந்தவகையில் இறந்தவர்களின் நினைவாக பொன்னிமலை கரட்டில் மிகப் பெரிய அளவிலான பாறைகளை அடுக்கி இந்த கல் திட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாறைகள் அசையாமல் இருக்க அவற்றிற்கு இடையே சிறிய கற்களை ஆதாரமாக வைத்துள்ளனர்.  எந்தவித நவீன தொழில் நுட்பங்களும் இல்லாத அக் காலத்தில் இதுபோன்ற பெரிய கல் திட்டைகளை அக்கால மனிதர்கள் உருவாக்கியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ADVERTISEMENT

இதே போன்ற வடிவமைப்பு கொண்ட கல் திட்டைகள் ஆஸ்திரேலியாவில் ஊரூ என்ற பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. இப் பழங்குடிகளின் நிறம், உருவ அமைப்பு, பழக்க வழக்கங்கள் தமிழர்களை போன்றே உள்ளது. தமிழர்கள் பயன்படுத்திய வளரி என்ற ஆயுதமும், அவர்கள் பயன்படுத்தும் பூமராங் என்ற ஆயுதமும் ஒரே வடிவமைப்பை கொண்டது. இவர்கள் நெற்றியில் இடும் குறியீடு பழனியை அடுத்த ரவிமங்கலத்தில் கிடைத்த பண்டைய கால முதுமக்கள் தாழிகளில் அச்சிடப்பட்டுள்ளது. ஆகவே, இங்கு வசிக்கும் பழங்குடிகள் தமிழர்களின் வழித்தோன்றல்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.  அண்மையில், அப்  பழங்குடியினரிடமும், தமிழகத்தின் கடலோரப் பகுதி தமிழர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட எம்130 வகையிலான மரபணு பரிசோதனையில் இருவருக்குமிடையே  ரத்த மாதிரிகள் ஒன்றாக இருப்பதை ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.  

ஆஸ்திரேலியாவில் கிடைத்த நினைவுச் சின்னத்தை ஆய்வாளர்கள் அறிவியல் முறைப்படி ஆய்வு செய்து 30 ஆயிரம் ஆண்டுகள் முதல் 50 ஆயிரம் ஆண்டுகள் வரை பழைமையானது என தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் இந்த கல்திட்டையை ஒப்பீட்டு அடிப்படையில் பார்க்கும்போது சுமார் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங் கற்காலத்தை சார்ந்தது என்பதை கணிக்கமுடியும்.  எனவே, அறிவியல் முறைப்படி கணக்கிட்டால் தமிழ் மொழியின் தொன்மையை 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட எடுத்துச் செல்ல முடியும்.  இதற்கு மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.  அத்துடன் நிலவியல் ஆய்வாளர்களின் கண்டங்களின் நகர்வு கொள்கைக்கும், லெமூரிய ஆய்வுக்கும் ஆயக்குடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இக் கல்திட்டை மிகப் பெரிய அளவில் உதவிடும் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT