தமிழ்நாடு

கேளிக்கை வரி விவகாரம்: நடவடிக்கை எடுக்க சேலம் மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

29th Jul 2019 12:57 AM

ADVERTISEMENT

கேளிக்கை வரி முன்வைப்புத் தொகையை 3 மாத காலத்துக்குள் செலுத்தாவிட்டால் திரையரங்க வளாகத்துக்கு எதிராக சட்டப்படியான நடவடிக்கை எடுக்க சேலம் மாநகராட்சி நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில், சேலம் ஏஆர்ஆர்எஸ் திரையரங்க வளாக மேலாளர் தாக்கல் செய்த மனுவில், சேலம் மாநகராட்சி கேளிக்கை வரி அதிகாரி எங்களது திரையரங்கத்துக்கு கடந்த ஜூன் 14-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும் கேளிக்கை வரியில் 8 சதவீதத்தை முன்வைப்புத் தொகையாகப் பெற வேண்டும் என மாநகராட்சி கேளிக்கை வரி அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 
இந்த வழக்கை அண்மையில் விசாரித்த நீதிபதி எம்.சுந்தர் பிறப்பித்த உத்தரவில், தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச் சட்டம் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தை அமல்படுத்த தேவையான துணை விதிகளை வகுக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த சட்டத்தின் 34-ஆவது பிரிவு அதிகாரம் வழங்குகிறது. சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏஆர்ஆர்எஸ் திரையரங்கு வளாகத்தில் 7 திரையரங்குகள் உள்ளன. 
இந்த 7 திரையரங்குகளுக்கும் சேர்த்து ரூ.31.40 லட்சத்தை முன்வைப்புத் தொகையாகச் செலுத்த வேண்டும் என சேலம் மாநகராட்சி கேளிக்கை வரி அதிகாரி கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரி சட்டத்தின்படி கேளிக்கை வரி முன்வைப்புத் தொகையை நிர்ணயிக்க அதிகாரிக்கு முழு அதிகாரம் உள்ளது. 
எனவே சேலம் மாநகராட்சி கேளிக்கை வரி அதிகாரி பிறப்பித்த உத்தரவில் தலையிட தேவையில்லை. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர் தரப்பில் ஏற்கெனவே செலுத்தியுள்ள தொகை போக எஞ்சிய ரூ.20 லட்சத்தை 3 மாத காலத்துக்குள் திரையரங்க நிர்வாகம் செலுத்த வேண்டும். 
ஒருவேளை இந்த தொகையை செலுத்தாவிடில் ஏஆர்ஆர்எஸ் திரையரங்க வளாகத்துக்கு எதிராக சட்டப்படியான நடவடிக்கையை  சேலம் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளலாம் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT