தமிழ்நாடு

குடிமைப் பணிகள் ஒதுக்கீட்டு முறையில் மாற்றம் செய்வதை கைவிட வேண்டும்: ராமதாஸ்

29th Jul 2019 04:27 AM

ADVERTISEMENT

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிகள் ஒதுக்கீட்டு முறையில் மாற்றம் கொண்டுவரும் முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யும் முறையில் மாற்றம் செய்ய மத்திய அரசு  மீண்டும் முடிவு செய்துள்ளது.  தகுதி, திறமை அடிப்படையில் இப்போது பணிகள் ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், அதில் மாற்றம் செய்ய மத்திய அரசு மீண்டும், மீண்டும் முயல்வதை சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்தியாவை நிர்வகிப்பதில் ஆட்சியாளர்களுக்குத் துணை நிற்பவர்கள் குடிமைப்பணி அதிகாரிகள் தான். அந்த பணியிடத்துக்கு தகுதியானவர்களும்,  திறமையானவர்களும் தான் தேர்வு செய்யப்பட வேண்டும். தகுதியில்லாதவர்கள் கொல்லைப்புறம் வழியாக இந்தப் பணிக்கு வருவதை அனுமதிக்க முடியாது.  எனவே, குடிமைப் பணிகளை ஒதுக்கும் முறையில் மாற்றங்கள் செய்வதைக் கைவிட்டு, இப்போதுள்ள நடைமுறையையே தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT