தமிழ்நாடு

கழிவுநீரால் மாசடைந்து வரும் காவிரி நீர்!" ஆய்வுக்கு வலியுறுத்தல்

29th Jul 2019 04:14 AM | -கே.விஜயபாஸ்கர் 

ADVERTISEMENT

 

ஈரோடு: சாய ஆலைகள் மற்றும் தோல் ஆலைகளிலிருந்து கலக்கும் நச்சுக் கழிவுகளால், காவிரி ஆற்று நீர் விஷத்தன்மையாக மாறி வருகிறது. எனவே, காவிரி நீர் குடிநீராகப் பயன்படுத்த உகந்ததா என்பதை அறிய முழுமையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

காவிரி, பவானி, நொய்யல் என மூன்று ஆறுகள் பாய்வதால் விவசாயம் செழித்து வளர்ந்த பூமியாக  விளங்கிய மாவட்டம் ஈரோடு. கரும்பு, மஞ்சள், நெல் என வளம் கொழிக்கும் பகுதி இது. பிறகு விசைத்தறி, பின்னலாடைத் தொழிலில் ஏற்பட்ட வளர்ச்சியும், அருகில் உள்ள கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தித் தொழிலில் ஏற்பட்ட வளர்ச்சியும் ஈரோட்டிலும் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தின.

இங்குள்ள நீர்வளத்தால் சாயப் பட்டறைகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டன. 

ADVERTISEMENT

பெருந்துறையில் சுமார் 2,700 ஏக்கர் பரப்பளவில் இயங்கிவரும் சிப்காட், இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டைகளில் ஒன்று. இங்குள்ள நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகளில் சாயப் பட்டறைகளும், தோல் தொழிற்சாலைகளும் அடக்கம்.

தொழில் வளர்ச்சிக்கு உதவிய ஆறுகள்: ஒட்டுமொத்தமாக ஈரோடு மாவட்டத்தில் இருந்து மட்டும் சுமார் ரூ. 12,000 கோடி அளவுக்கு ஜவுளி ஏற்றுமதி இருந்து வந்தது. இவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக அமைந்தது காவிரி, பவானி நதிகளின் நீர். விவசாயத்துக்கு மட்டுமல்லாமல் ஈரோட்டின் தொழில் துறையே இந்த நீரை நம்பி உருவெடுக்க ஆரம்பித்தது.

ஆனால்,  பிரம்மாண்டமாக வளர்ந்த இந்தத் தொழிற்சாலைகளால் ஆறுகளில் விஷத்தன்மை மிகுந்த கழிவுகள் கலந்தன. தோல் தொழிற்சாலைகளில் இருந்தும், சாயப்பட்டறைகளில் இருந்தும் இரவு, பகல் எந்நேரமும் வெளியேற்றப்பட்ட கழிவுநீர் காவிரி, பவானி நதிகளை முற்றிலுமாக நாசம் செய்திருக்கிறது.

நொய்யலின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் ஒரத்துப்பாளையம் அணையை திறக்கக் கூடாது என்று விவசாயிகள் போராடும் அளவுக்கு அந்த நதி நாசமடைந்திருக்கிறது.

பெருமளவில் மழை பெய்து, மேட்டூர் அணை திறக்கப்படும் காலங்களில் மட்டுமே ஈரோட்டில் காவிரியில் தண்ணீர் ஓடும். மற்ற காலங்களில் காவிரி ஆறு வறண்டும், கறுப்பு நிறக் கழிவுநீராகவுமே காணப்படுகிறது. 

ஈரோட்டைப் பொருத்தவரை மாநகராட்சியின் கழிவுநீர் உள்பட தினசரி சுமார் 9 கோடி லிட்டர் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கான பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அதிகம் இல்லாத காரணத்தால், சுத்திகரிப்பு நிலையங்களை வைத்திருக்கும் தொழிற்சாலைகள் மட்டும் சுத்திகரித்த கழிவுநீரை வெளியேற்றுகின்றன. மற்றவை நேரடியாக கழிவுநீரை ஆறுகளிலும், ஓடைகளிலும் விடுகின்றன. பெருந்துறை சிப்காட்டைச் சுற்றியுள்ள சுமார் 5 கி.மீ. சுற்றளவில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தவே முடியாத அளவுக்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கழிவுநீரை கட−ல் கலக்க வேண்டும்


தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு இணைச் செயலாளர் என்.சிவநேசன் கூறியதாவது: 

தோல் தொழிற்சாலைகளும், சாயப் பட்டறைகளும் நிலத்தடி நீரையும் ஆறுகளையும் மாசுபடுத்துவதால் அவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் பல தோல் பதனிடும் கூடங்களும், சாயப்பட்டறைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், ஏற்றுமதி ரூ. 5,000 கோடியாகக் குறைந்திருக்கிறது. சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதற்கு ஆகும் செலவு மிக அதிகம். தினமும் ஒரு லட்சம் லிட்டர் நீரை சுத்திகரிப்பதற்கான ஆலையை அமைக்க சுமார் ரூ. 1 கோடி செலவாகும் என்பதால் தனியாக ஆலையை அமைக்க தொழிலதிபர்கள் தயங்குகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் 17 பேர் குழுவாக இணைந்து 250 யூனிட்டுகளுக்கு ஒரு பொது சுத்திகரிப்பு நிலையத்தை அருள்புரத்தில் ஏற்படுத்திச் செயல்படுத்தி வருகின்றனர். நீர் மாசு பிரச்னையை மனதில் கொண்டு 10 ஆண்டுகளுக்கு முன்னரே ரூ. 700 கோடி மதிப்பில் ஒரு பொது சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து, கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் கழிவுநீரை சுத்திகரித்து குழாய் மூலம் கரூர் வரை எடுத்துச் சென்று, அங்கே ஒரு சேகரிக்கும் அமைப்பை அமைத்து, திருச்சி வழியாக நாகப்பட்டினம் வரை கொண்டுசென்று கடலில் சேர்க்க வேண்டும் என தொழில் வணிகர்கள் சபை சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பும் வெளியிட்டார். ஆனால் இதுவரையில் செயல்படுத்தவில்லை. இத் திட்டத்தின் மூலம் சாயத் தொழிற்சாலை, தோல் தொழிற்சாலை உள்ளிட்ட பல தொழிற்சாலைகளை மாசுகளை ஏற்படுத்தாவண்ணம் நடத்த முடியும். ஒட்டுமொத்த மேற்கு மண்டலமும் வளர்ச்சியடையும் என்றார்.


நோய்களைப் பரப்பும் கழிவுநீர் ஆறுகள்


தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி கூறியதாவது: 

தமிழகத்தில் மொத்தமுள்ள 35 மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்டவை காவிரி நீரை ஏதாவது ஒரு வகையில் சார்ந்திருக்கும் மாவட்டங்கள். ஆனால், ஈரோடு மாவட்டத்தை காவிரி கடந்து செல்லும்போது பெரிய அளவில் மாசுபடுத்தப்படுகிறது. இந்த மாசுபடுத்தப்பட்ட நீரே திருச்சி, தஞ்சை மாவட்டங்களுக்குச் செல்கிறது. மாசுபட்ட குடிநீரைக் குடிப்பது, மாசுபட்ட நீரில் வேலை செய்வது போன்ற காரணங்களால் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.

ஒவ்வொரு நாளும் 20 முதல் 25 புதிய புற்றுநோயாளிகள் ஈரோடு மாவட்டத்தில் அடையாளம் காணப்படுகின்றனர். இதற்கு காரணமே பிற நாடுகளில் தடைசெய்யப்பட்ட ஆபத்தான மாசு ஏற்படுத்தும் தொழில்கள் இங்கே அனுமதிக்கப்படுவதுதான். 

தவிர உள்ளாட்சி அமைப்புகளின் கழிவுகளும் எந்த சிந்தனையுமின்றி அப்படியே ஆற்றில் விடப்படுன்றன. பிறகு அதிலிருந்தே குடிநீர் இறைத்து வழங்கப்படுகிறது. இதனால், மாவட்டம் முழுவதும் நோய் பரவி வருகிறது. 

இப்போது, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொழிற்சாலைகளின் கழிவுநீர் வடிகாலாக மட்டுமே இங்கிருக்கும் ஆறுகள் இருக்கின்றன. கோடையில் இந்த ஆற்றில் உள்ள நீரைக் குடிக்கவே முடியாது. 

தொழிற்சாலைகளால் மாசுபடுத்தப்பட்ட தண்ணீர் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் நேரடியாக காவிரி ஆற்றில் கலக்கிறது. 

அதனால், ஈரோட்டுக்குத் தேவையான குடிநீரை நகருக்குள் இருந்து எடுக்க முடியாமல் ஊராட்சிக்கோட்டை என்ற இடத்தில் இருந்து எடுத்துவந்து மக்களுக்கு வழங்கும் திட்டத்தைச்  செயல்படுத்தி வருகிறது ஈரோடு மாநகராட்சி. 

எனவே, காவிரி வழித்தடத்தில் ஈரோட்டை அடுத்துள்ள சுமார் 15 மாவட்ட மக்களுக்கு நஞ்சில்லாத குடிநீர் வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். 
காவிரி ஆற்றில் இருந்து உறிஞ்சி எடுத்து வழங்கப்படும் தண்ணீர் நச்சு இல்லாததுதானா என்பதை அறிய தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இந்த ஆய்வை முழுமையாக நடத்தி அதன் அடிப்படையில் ஆற்றில் கழிவுகளைக் கலக்காமல் தடுத்திட அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மலடாகும் விவசாய நிலங்கள்

இதுகுறித்து காளிங்கராயன் பாசன சபைத் தலைவர் வி.எம்.வேலாயுதம் கூறியதாவது: 

பவானி ஆறு ஈரோடு வரும் வரை பெரிய அளவில் மாசுபடுவதில்லை. ஆனால், காளிங்கராயன்பாளையத்தில் துவங்கி, காளிங்கராயன் வாய்க்காலில் தோல், சாய ஆலைகளின் கழிவுகள் கலக்க விடப்படுகின்றன. 

கடந்த 15 ஆண்டுகளில் இந்த ரசாயனக் கழிவுகளால் விவசாயம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் காளிங்கராயன் கால்வாய்ப் பாசனத்தில் ஒரு கோடைக்கு 50 மூட்டை நெல் எடுத்துக்கொண்டிருந்த பகுதியில் இப்போது 20 மூட்டை விளைச்சல் எடுப்பதற்கே சிரமப்படுகிறோம். சாகுபடி நிலங்கள் மலடாக மாறிக் கொண்டிருக்கின்றன. மஞ்சளுக்காக சிறப்புப் பெற்ற ஈரோட்டில் தற்போது மஞ்சள் விவசாயம் செய்யவே தயக்கமாக இருக்கிறது. ஒரு காலத்தில் ஏக்கருக்கு 15 குவிண்டால் மஞ்சள் அறுவடை நிகழ்ந்த இடத்தில் தற்போது 6 முதல் 7 குவிண்டால் எடுக்கவே சிரமமாக உள்ளது என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT