தமிழ்நாடு

ஒரே நாளில் 3 லட்சம் பக்தர்கள் தரிசனம்

29th Jul 2019 05:17 AM

ADVERTISEMENT

 

அத்திவரதர் பெருவிழாவின் 28 -ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

அத்திவரதர் பெருவிழாவின் 28-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை வெளிர் நீல நிறப் பட்டாடை மற்றும் அங்கவஸ்திரத்துடன், முத்து கிரீடம் அணிந்து அத்திவரதர் காட்சியளித்தார். கதம்பம் மற்றும் மல்லிகை மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.

சுவாமியை தரிசனம் செய்ய 8 மணி நேரம் 

ADVERTISEMENT

இந்த ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி தினமாக இருந்ததால் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சுவாமியை தரிசனம் செய்ய பொது வரிசையில் 8 மணி நேரம் வரை ஆனதாக அவ்வரிசையில்  வந்த பக்தர்கள் சிலர் தெரிவித்தனர். முக்கிய பிரமுகர்கள் வரிசையில் நுழைவு வாயில் பகுதியில்  காவல்துறையினரின் அனுமதி பெற்று உள்ளே வருவதற்கு மட்டுமே ஒரு மணி நேரம் வரை ஆனது.  அதன் பின்னர் சுவாமியை 20 நிமிடத்தில் தரிசிக்க முடிந்ததாக முக்கியஸ்தர் வரிசையில் வந்த பலரும் தெரிவித்தனர்.

பொது தரிசனப் பாதையிலும், முக்கிய பிரமுகர்கள் வரிசையில் வந்த பக்தர்களுக்கு சுகாதாரத் துறையின் சார்பில் உடல் சோர்வைப் போக்க ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்கினார்கள்.திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகளின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

முக்கிய பிரமுகர்கள் சுவாமி  தரிசனம்: மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.பிரகலாத் சிங் படேல் ஞாயிற்றுக்கிழமை தனது குடும்பத்தினருடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா மற்றும் கோயில் பட்டாச்சாரியார்கள்  பூரண கும்ப மரியாதையுடன் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். மத்திய அமைச்சருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் அத்திவரதர் திருவுருவப்படமும், பிரசாதமும் வழங்கப்பட்டது.

புதுச்சேரி மாநில அரசின் முதன்மைச் செயலர் அஸ்வினிகுமார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் அத்திவரதரை ஞாயிற்றுக்கிழமை தரிசனம் செய்தனர்.

சயனக் கோலம் இன்னும் 3 நாள்கள்: அத்திவரதர் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சியளிக்கவுள்ளார். இதனிடையே சயனக் கோலத்தில் அத்திவரதரை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் காஞ்சிபுரம் நோக்கி வெள்ளமெனத் திரண்டு வருகின்றனர். 

வார நாள்களை விட சனி, ஞாயிறுகளில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாகி வருகிறது. சயனக் கோலத்தில் அத்திவரதரை தரிசிக்கும் கடைசி ஞாயிற்றுக்கிழமை இது என்பதால் மற்ற ஞாயிற்றுக்கிழமைகளை விட இந்த ஞாயிற்றுக்கிழமை வரலாறு காணாத மக்கள் கூட்டத்தால் காஞ்சிபுரம் நகரம் ஸ்தம்பித்தது. வரும் வியாழக்கிழமை (ஆக.1) முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கவுள்ளார்.

பக்தர்களை திருப்பி அனுப்பிய போலீஸார் 

காலையிலிருந்து மதியம் வரை கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருந்ததால் போலீஸார் பாதுகாப்பு கருதி பக்தர்களை திருப்பி அனுப்பி வைக்கத் தொடங்கினார். திருக்கச்சி நம்பி தெருவில் உள்ள  விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தின் முன்பாக  இரும்புத் தடுப்புகள் அமைத்து பக்தர்களை கோயிலுக்கு வரும் வழியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினார்கள். 

பக்தர்கள் பலரும் வெகுதொலைவிலிருந்து வந்தும் சுவாமியை தரிசனம் செய்ய விடாமல் திருப்பி அனுப்புகிறீர்களே என்று காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள்  சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து, பக்தர்களை திங்கள்கிழமை அதிகாலையில் தரிசனத்துக்கு வருமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர். கோயில் வளாகத்துக்குள் லட்சக்கணக்கானோர்  சுவாமி தரிசனம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் வெளியில் வருவதற்கே இரவு 7 மணிக்கு மேலாகி விடும். இத்தகைய சூழ்நிலையில் மேலும் பலரை கோயிலுக்குள் அனுப்பினால் ஏதேனும் விபரீதம் ஏற்படலாம் . பாதுகாப்பு  கருதியே கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிக்க மறுப்பதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

40 க்கும் மேற்பட்டோர் மயக்கம்: கூட்ட நெரிசலில் சிக்கிய 40 க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். இவர்களுக்கு கோயில் வளாகத்திலும், வெளியில் உள்ள மருத்துவ முகாம்களிலும் சிகிச்சையளிக்கப்பட்டது.

கூட்ட நெரிசல் குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம்

கூட்ட நெரிசல் குறித்து மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா கூறியது:

ஏகாதசி நாளாகவும், ஞாயிற்றுக்கிழமையாகவும் இருப்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணி வரை மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். வடக்கு மற்றும் தெற்கு மாடவீதிகள், ரங்கசாமி குளம் பகுதிகளில் காத்திருக்கும் பக்தர்கள் கூட்டம்  மிக அதிகமாக உள்ளது. 

பக்தர்களை திருப்பி அனுப்பவில்லை: ஞாயிற்றுக்கிழமை இரவு வரை சுமார் 3 லட்சம் பேராவது சுவாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் பக்தர்களை ஒவ்வொரு இடத்திலும் நிறுத்தி, நிறுத்தி சுவாமி தரிசனம் செய்ய அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறோம். யாரையும் திரும்பிப் போகச் சொல்லவில்லை. 

கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 33 பேர் மயக்கமடைந்தனர். இவர்களில் 18 பேர் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்களில் தங்கி சிகிச்சை பெற்று திரும்பினர். மற்றவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று அவர்களும் நலமுடன் உள்ளனர். சிலர் உயிரிழந்து விட்டதாக வதந்திகள் பரப்பப்படுவதை யாரும் நம்ப வேண்டாம்.

கோயிலுக்கு உள்ளேயும், வெளியேயும் போதுமான மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு மருந்துகளும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ முகாம்களை மேலும் அதிகப்படுத்த முடிவு செய்துள்ளோம். வரும் ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்க இருப்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் முன்கூட்டியே செய்து வருகிறோம்.

150 கழிப்பறைகள் ஆரம்பத்தில் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது 210 கழிப்பறைகள் உள்ளன. இன்னும் இரு தினங்களில்  மேலும் 30 கழிப்பறைகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது.
தமிழக அரசு சார்பில் இரு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களும் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து  தேவையான நடவடிக்கைகளை எடுத்து  வருகின்றனர்.  வடக்கு மாட வீதியிலும், டோல்கேட் பகுதியிலும் ஒரே நேரத்தில்  16 ஆயிரம் பேர் முதல் 20 ஆயிரம் பேர் வரை அமரும் வகையில் கூடுதலாக இரு பந்தல்கள் அமைக்கப்பட இருப்பதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.

மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய காஞ்சிபுரம்

ஞாயிற்றுக்கிழமை  விடுமுறை நாளாகவும், ஏகாதசி தினமாகவும் இருந்ததால் தெருக்களில் நடமாட முடியாத அளவுக்கு  பக்தர்கள் கூட்டம் அதிகமாகி மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது  காஞ்சிபுரம் நகரம்.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். அய்யம்பேட்டை பகுதி வழியாக வந்த வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. நகருக்குள்  வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படாததால் திம்மராஜம்பேட்டை வரை வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின.

ஓரிக்கையிலிருந்து பெரியார் நகர் வரை வெளியூர் வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோயிலின் மாடவீதிகள்,  ரங்கசாமி குளம் முதல் செட்டி தெரு, திருக்கச்சி நம்பி தெரு ஆகிய பகுதிகளில் நடமாட முடியாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.  

வரதராஜப் பெருமாள் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள திருக்கச்சி நம்பி தெருவில் ஜனநெருக்கடி அதிகமாக இருந்ததால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் எதுவும் செல்லமுடியவில்லை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT