தமிழ்நாடு

அதிமுக முன்னாள் எம்.பி.யின் மனைவி கொலை வழக்கு: 3 மாதங்களாக தேடப்பட்டு வந்த மகன் கைது

29th Jul 2019 05:59 PM

ADVERTISEMENT


புது தில்லி: சென்னையில் அதிமுக முன்னாள் எம்.பி.யின் மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த மகன் பிரவீன் புது தில்லியில் இன்று கைது செய்யப்பட்டார்.

சென்னை பெசன்ட் நகர் 6-ஆவது அவென்யூவில் முன்னாள் எம்.பி., குழந்தைவேலு குடும்பத்துடன் வசித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைவேலு காலமாகிவிட்ட நிலையில், குழந்தைவேலுவின் மனைவி ரத்தினம் (63) மட்டும் அங்கு தனியாக வசித்து வந்தார். லண்டனில் படித்து வந்த குழந்தைவேலுவின் மகன் பிரவீன் (35) கடந்த மாதம் இங்கு வந்தார். தாய் ரத்தினத்துக்கும், பிரவீனுக்கும் இடையே சொத்து தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. 

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ரத்தினம் திருப்பூரில் வசிக்கும் தனது மகள் சுதாவை தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு, பிரவீன் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். பின்னர் அந்த தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுதா, இது குறித்து துரைப்பாக்கத்தில் உள்ள உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் உடனே ரத்தினம் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், சந்தேகமடைந்த அவர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு ரத்தினம் கை, கால் கட்டப்பட்ட நிலையில், வாயில் காகிதம் திணிக்கப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள், ரத்தினம் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக சாஸ்திரிநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருக்கும் பிரவீனை தேடி வந்தனர். பிரவீனை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், சொத்துப் பிரச்னையின் காரணமாக ஏற்பட்ட தகராறில் பிரவீன், தாய் ரத்தினத்தை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், கடந்த 3 மாதமாக தலைமறைவாக இருந்த பிரவீன் தில்லியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT