தமிழ்நாடு

சென்னைவாசிகளே.. நீங்கள் நிச்சயம் அதிர்ஷ்டசாலிகள்தான்: ஏன் தெரியுமா?

27th Jul 2019 02:49 PM

ADVERTISEMENT


சென்னைவாசிகள் கடுமையான குடிநீர் பஞ்சத்தில் தத்தளித்து வரும் நிலையில், கடந்த ஜூன் 1ம் தேதி முதல் இன்று வரை வழக்கத்தை விட 59% கூடுதலாக மழை பெய்திருக்கிறது என்கிறது புள்ளி விவரங்கள்.

ஒரே நாளில் ஒபாமா ஆன கதை என்று சினிமாவில் சொல்வது போல, ஒரு சில நாட்கள் வருண பகவான் சென்னை நகரின் மீது காட்டிய அளவில்லா கருணையால் மழை பற்றாக்குறை என்ற நிலையில் இருந்து 59% கூடுதல் மழை என்ற அளவைத் தொட்டுள்ளோம்.

வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் சென்னைக்கு பெய்ய வேண்டிய மழையின் அளவு வெறும் 155.7 மி.மீ. தான். ஆனால் சென்னைக்குக் கிடைத்திருக்கும் மழையின் அளவு 247.மி.மீ. தொடர்ந்து வெப்பச் சலனம் காரணமாக சென்னையில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தட்பவெப்பநிலை சாதகமாக இருந்தால் அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழைக்கான வாய்ப்பு உள்ளது. 

ADVERTISEMENT

சென்னையில் பெய்த மழை நீர் முழுக்க நிலத்தடிக்குள் சென்றிருக்குமானால் நிச்சயம் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்திருக்கும். வீடுகளில் உள்ள மோட்டார்களில் தண்ணீர் எடுக்க முடிகிறதோ இல்லையோ, நிச்சயம் மழை நம்மை ஏமாற்றவில்லை என்பதை முதலில் நம்ப வேண்டும். 

பொதுவாக தென்மேற்குப் பருவ மழையால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களுக்கு பெரிதாக மழை வாய்ப்பு இருக்காது என்பது புள்ளி விவரமாக இருந்தாலும், சென்னை மக்களின் மீது தனிக்கருணைக் காட்டியிருக்கும் வருண பகவானால், ஒரு சில நாட்களில் இரவில் பெய்த கன மழை காரணமாக, சென்னை மாநகரமே அதிகப்படியான மழைப் பட்டியலில் இணைந்துவிட்டது.

சென்னை மட்டுமல்ல, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் வழக்கமான அளவை விட கூடுதலாகவே மழை பதிவாகியுள்ளது.

மற்ற மாவட்டங்கள் எல்லாம் இன்னும் பற்றாக்குறை பட்டியலில் தான் உள்ளன. 

எனவே, வறட்சியின் கோரப்பிடியில் இருந்த சென்னையை மழை தனது தனிப்பெருங்கருணையால் காப்பாற்றிவிட்டது. அதன் கருணையை நாம் பொக்கிஷமாக பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அது மட்டுமே அடுத்த ஆண்டும் இதேப்போல குடங்களைத் தூக்கிக் கொண்டு லாரிகளைத் துரத்தும் நிலையில் இருந்து நம்மைக் காக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT