திருநெல்வேலியில் முன்னாள் மேயர் உள்பட மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை கிடைத்துள்ள தடயங்கள் குறித்து சிபிசிஐடி போலீஸார் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினர்.
திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் மேயராகப் பணியாற்றியவர் உமா மகேஸ்வரி (65). திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். இவர், தனது கணவர் முருகசங்கரனுடன் (72) திருநெல்வேலி அரசுப் பொறியியல் கல்லூரி அருகே ரெட்டியார்பட்டி-மேலப்பாளையம் பிரதான சாலையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இவர்களது வீட்டில் பணிப் பெண்ணாக மேலப்பாளையம் அமுதா பீட் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (40) பணியாற்றி வந்தார்.
கடந்த 23ஆம் தேதி நண்பகலில் மூன்று பேரும் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த மர்ம கும்பல் மூன்று பேரையும் கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை துப்புக் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. உறவினர்கள், கண்காணிப்பு கேமரா பதிவுகள், செல்லிடப்பேசி அழைப்புகள் என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில், கொலை நடந்த இடத்தில் இதுவரை கிடைத்துள்ள தடயங்கள், விரல் ரேகைப் பதிவுகள் குறித்து சிபிசிஐடி போலீஸார் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினர். இவ் வழக்கு இதுவரை சிபிசிஐடிக்கு மாற்றப்படவில்லை. இருப்பினும் அவர்கள் ஏற்கெனவே விசாரித்து வரும் வழக்குகளின் தடயங்கள் ஏதேனும் இதில் ஒத்துப்போகிறதா என்பதை ஆராய்வதற்காக சிபிசிஐடி ஆய்வாளர் பிறைச்சந்திரன் தலைமையில் 6 பேர் குழுவினர் விசாரித்தனர். இதுதவிர மாநகர குற்றப் பிரிவு குழுவினரும் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறியது: மூவர் கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. உமா மகேஸ்வரி மகள்கள், மருமகன்களிடம் மீண்டும் இரண்டாம்கட்டமாக விசாரித்துள்ளோம். குடும்பத்தின் முன்பகைகள், சொத்து தகராறுகள், மிரட்டல்கள் ஏதேனும் உள்ளனவா என்பது குறித்து விசாரித்து பதிவு செய்துள்ளோம். 25 பவுனுக்கும் குறைவான நகைகளே மாயமாகியுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், விரல் ரேகைப் பதிவுகளிலும் குடும்பத்தினரின் ரேகைகளைத் தவிர பிற வெளியாள்களின் ரேகைகள் பதிவு துல்லியமாக கிடைக்கவில்லை. தனிப்படையினர் இதுவரை 70-க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்துள்ளனர். ஆனால், இதுவரை துப்புத்துலங்காமல் உள்ளது. விசாரணையைத் துரிதப்படுத்தி கொலையாளிகளை கைது செய்ய முழுமுயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றனர்.