தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினராக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
தமிழகத்தில் காலியாக இருந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கு அதிமுக சார்பில் ஏ.முஹம்மத் ஜான், என்.சந்திரசேகரன், அதிமுக ஆதரவுடன் பாமகவைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ், திமுக சார்பில் பி. வில்சன், எம். சண்முகம், திமுக ஆதரவுடன் மதிமுக பொதுச் செயலர் வைகோ ஆகியோர் ஜூலை 18-ஆம் தேதி போட்டியிட்டின்றித் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் அதிமுக உறுப்பினர்கள் இருவரும், திமுக உறுப்பினர்கள் இருவரும், மதிமுக பொதுச் செயலர் வைகோ என ஐந்து பேரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக வியாழக்கிழமை தமிழில் உறுதிமொழி ஏற்று பதவியேற்றுக் கொண்டனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வியாழக்கிழமை பதவியேற்கவில்லை.
இந்நிலையில், மாநிலங்களவை வெள்ளிக்கிழமை காலை அதன் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு தலைமையில் கூடியதும், புதிய உறுப்பினர் பதவியேற்குமாறு ஏற்குமாறு எம்.வெங்கய்ய நாயுடு கேட்டுக்கொண்டார். இதையடுத்து, அன்புமணி ராமதாஸ் தமிழில் உறுதிமொழி ஏற்றார். பின்னர், எம். வெங்கய்ய நாயுடுவின் இருக்கைக்கு அன்புமணி சென்றார். அவருக்கு அவைத் தலைவர் வாழ்த்து தெரிவித்தார். பிற உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி அன்புமணி ராமதாஸை வரவேற்றனர்.
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.