தமிழ்நாடு

மருத்துவ ஆணையத்தால் கல்விக் கட்டணம் அதிகரிக்கும் ஆபத்து: பாமக நிறுவனர் ராமதாஸ்

27th Jul 2019 01:31 AM

ADVERTISEMENT


மருத்துவ ஆணையத்தால் மருத்துவப் படிப்புக்கான கல்விக் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
மருத்துவக் கல்வியை முறைப்படுத்துவதற்கான சட்டம் என்று கூறி நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விரைவில் நிறைவேற்றவிருக்கும் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் சமூகநீதிக்கு ஆபத்தான அம்சங்கள் ஏராளமாக இடம்பெற்றுள்ளன. 
இதில், முதன்மையானது தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்யும் அதிகாரம் மாநில அரசிடமிருந்து பறிக்கப்படும் என்பதுதான். 
தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு அதிகபட்சமாக ரூ. 4 லட்சமும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.12 லட்சமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதனால்,  அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் கடன் வாங்கியாவது மருத்துவப் படிப்பைப் படிக்க முடிகிறது.
ஆனால், தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், தமிழகத்திலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை மாநில அரசால் நிர்ணயிக்க முடியாது. 
50 சதவீத இடங்களுக்கான கட்டணத்தை மருத்துவ ஆணையம் நிர்ணயிக்கும். 
தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் படிப்புக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.25 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால், இனி வரும் காலங்களில் தனியார் கல்லூரிகள், தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 50 சதவீத இடங்களுக்கான கட்டணமாக ரூ.25 லட்சம் நிர்ணயிக்கப்படலாம்.
மீதமுள்ள 50 சதவீத இடங்களுக்கான கட்டணத்தை கல்லூரி நிர்வாகங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்பதால், அவற்றுக்கான ஆண்டுக் கட்டணம் ரூ.50 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. 
இது தான் மிகப் பெரிய கல்விக் கட்டண கொள்ளையாக அமையும். 
மத்திய அரசு கொண்டு வந்த நீட் சட்டமாக இருந்தாலும், கட்டண நிர்ணய முறையாக இருந்தாலும்  அவை ஏழை, நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை கலைப்பவையாகவே உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT