தமிழ்நாடு

'தொரட்டி 'பட நாயகி மாயம்: உயர்நீதிமன்றத்தில் மனு

27th Jul 2019 12:55 AM

ADVERTISEMENT


மாயமான தொரட்டி திரைப்பட நாயகி சத்யகலாவை மீட்டுத் தரக் கோரி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஷமன் மித்ரு தாக்கல் செய்த மனுவில், ஷமன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள தொரட்டி திரைப்படம், வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. 
இந்தத் திரைப்படத்தை நான் தயாரித்து நடித்துள்ளேன். இந்தப் படத்தில் சத்யகலாவும் நடித்துள்ளார். திரைத் துறையில் சத்யகலா  பணியாற்றுவதில், அவரது தந்தை ரத்தினத்துக்கு விருப்பமில்லை. இதனால் சத்யகலாவுக்கு திருமணம் செய்து வைக்க அவர் முயற்சிப்பதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தார். 
இந்த நிலையில், சத்யகலா திடீரென மாயமாகி உள்ளார். இதனைத் தொடர்ந்து, படத் தயாரிப்புக் குழு சார்பில், கடந்த ஜூலை 25-ஆம் தேதி பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். அந்தப் புகாரின் மீது போலீஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் சென்னையில் உள்ள சத்யகலாவின் வீட்டிலும் யாரும் இல்லை. அவரது செல்லிடப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. எனவே, ரத்தினத்தின் சட்ட விரோத காவலில் உள்ள நடிகை சத்யகலாவை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். 
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை ஆஜரான வழக்குரைஞர் இந்து கருணாகரன் முறையீடு செய்தார். வழக்கை வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுப்பதாக கூறி, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT