தமிழக அரசின் சார்பில் நிகழாண்டு மாற்றியமைக்கப்பட்ட பிளஸ் 2 வகுப்புக்கான ஆங்கில பாடநூலில் தமிழின் தொன்மை குறித்து தவறான தகவல் இடம்பெற்றுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 2018-2019-ஆம் கல்வியாண்டில் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து நிகழ் கல்வியாண்டில் (2019-2020) எஞ்சியுள்ள அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்கப்பட்டன.
நிகழாண்டு ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கான கணிதம், சூழ்நிலையியல் பாடநூல்களில் தேசிய கீதம் தவறாக அச்சிடப்பட்டிருந்தது. இதற்கு அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் என பலதரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து அந்தப் பிழைகளை சரி செய்ய மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. மேலும் இது தொடர்பாக மூன்று ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் நிகழாண்டு மாற்றியமைக்கப்பட்ட பிளஸ் 2 வகுப்புக்கான ஆங்கில பாடநூலில் தமிழ் மொழியின் தொன்மை குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அந்தப் பாடநூலில் தொன்மையான மொழியான தமிழின் நிலை என்ற பாடம் இடம்பெற்றுள்ளது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியரான ஜார்ஜ் எல்.ஹார்ட் என்பவர் எழுதிய இந்தப் பாடத்தில் தொன்மையான மொழிகள் தோன்றிய ஆண்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழைக் காட்டிலும்... 142-ஆவது பக்கத்தில் 5-ஆவது அலகில் தமிழ், சம்ஸ்கிருதம், கிரேக்கம், சீனம், லத்தீன், ஹீப்ரூ, அரபு ஆகிய மொழிகள் மற்றும் அவை தோன்றிய ஆண்டுகள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை கால வாரியாக வரிசைப் படுத்துமாறு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதில் தமிழ் கி.மு. 300 முதல் வழக்கத்தில் இருப்பதாகவும், சம்ஸ்கிருதம் கி.மு. 2000 முதல் வழக்கத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று கிரேக்க மொழியின் காலம் கி.மு. 1500, சீன மொழியின் காலம் கி.மு. 1250, ஹீப்ரு மொழியின் காலம் கி.மு.1000 என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் உலகின் மூத்த மொழி, 5 ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது என தமிழ் ஆர்வலர்களால் கூறப்பட்டு வரும் நிலையில், பிளஸ் 2 பாடநூலில் தமிழ் மொழி குறித்து இடம்பெற்றுள்ள தகவல் தமிழாசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தத் தகவல் மாணவர்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தி விடும் என கல்வியாளர்கள் தெரிவித்தனர். மேலும் இந்தப் பிழையை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தொடரும் பிழைகள்...: இந்த விவகாரம் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில், ஏற்கெனவே, பிளஸ் 1 மற்றும் 8-ஆம் வகுப்புப் பாட நூல்களில் பல்வேறு தலைவர்கள் குறித்த வாழ்க்கை வரலாற்று தகவல்களில் பிழைகள் உள்ளன. இது போன்ற தவறான கருத்துகள் பட்டியலிடப்பட்டு இதுவரை 19 பிழைகள் உடனடியாக நீக்கப்படவேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் சுற்றறிக்கையாகவே அனுப்பப்பட்டது. தற்போது தமிழின் தொன்மை தொடர்பாக மீண்டும் ஒரு சுற்றறிக்கை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படவுள்ளது என்றனர்.
நிகழாண்டு புதிய பாடத் திட்டத்தில் பெரும்பாலான பிழைகள் வரலாறு மற்றும் மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ளன. பாடநூல்கள் முறையாக மறு ஆய்வு செய்யப்படாதது, மிகக் குறுகிய கால கட்டத்துக்குள் அவசரமாக பாடநூல்கள் எழுதப்பட்டது ஆகியவற்றின் காரணமாகவே இதுபோன்ற தவறான தகவல்கள் பாடநூல்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
தவறான பாடப் பகுதி நீக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
பிளஸ் 2 பாடநூலில் தமிழ் மொழியின் தொன்மை குறித்து தவறாக இடம்பெற்றுள்ள தகவலை நீக்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியாக நமது தாய்மொழி தமிழ் விளங்குகிறது. பிளஸ் 2 பாடநூலில் தமிழ் மொழியின் தொன்மை குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தத் தவறுக்கு காரணமானவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட பாடப் பகுதியில் உரிய திருத்தங்கள் செய்ய அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.