அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சப் புகார் தொடர்பான வழக்கில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனின் மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பதிலிருந்து தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் குமார் ஓரி விலகுவதாக தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தில்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்குத் தடைக் கோரி டிடிவி தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. பாதக் அமர்வில் ஏப்ரல் 1-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, டிடிவி தினகரன், பி. குமார் உள்ளிட்டோர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் எஸ். ஹரிகரண், இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் ஜாமீனில் உள்ளனர். இந்த மனுக்களை விசாரிக்க வேண்டும் என்றார்.
தில்லி காவல்துறை சார்பில் ராகுல் மெஹ்ரா ஆஜராகி, இந்த மனுக்கள் அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை.
இவற்றை ஒரே வழக்காக கருதி விரைந்து விசாரிக்க வேண்டும் என்றார். சுகேஷ் சந்திரசேகர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க வேண்டும் என்றார்.
வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி எஸ்.கே. பாதக், ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள சுகேஷ் சந்திர சேகர் மனு ஏப்ரல் 10-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். பாட்டியலா நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை கோரும் மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 26-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் குமார் ஓரி அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் டிடிவி தினகரன் சார்பில் எஸ். ஹரிகரண் ஆஜரானார்.
அப்போது, நீதிபதி, டி.டி.வி. தினகரன் தொடர்புடைய வழக்கில் ஏற்கெனவே ஆஜராகி இருப்பதால், இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்து விலகிக்கொண்டார்.
மேலும், இது தொடர்புடைய வழக்கு விசாரணையை ஜூலை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை, பி.குமார், டிடிவி தினகரன் ஆகியோருக்கு எதிரான விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.