கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியே தீருவேன் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்ததாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் அன்புமணி ராமதாஸ் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு 15 நிமிஷங்கள் நீடித்தது. இது தொடர்பாக பாமக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:
மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக அன்புமணிக்கு பிரதமர் வாழ்த்துக் கூறினார்.
தமிழகத்தின் பாசன வளத்தை மேம்படுத்த கோதாவரி -காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி வேண்டுகோள் விடுத்தார்.
அதை ஏற்ற பிரதமர் முதல் முறை பிரதமரான ஐந்தாண்டுகளில் தூய்மை இந்தியா திட்டத்தில் அதிக கவனம் செலுத்தினேன். இப்போது பிரதமராகியுள்ள நிலையில், அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் பாசனத் திட்டங்கள் மற்றும் நதிகள் இணைப்பில் அதிக கவனம் செலுத்துவேன். கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்துக்கு எவ்வளவு கோடி செலவானாலும் அதை நான் செயல்படுத்தியே தீருவேன் என்று உறுதியளித்தார்.
தமிழகத்தின் காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது குறித்தும், அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்திருப்பது குறித்தும் பிரதமரின் கவனத்துக்கு அன்புமணி கொண்டு சென்றார்.
நைஜீரியாவின் நைஜர் படுகையில் இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதால் அங்கு வேளாண்மை முற்றிலுமாக அழிந்து போனதையும், அதனால், அங்கு விவசாயத்தை நம்பியிருந்த விவசாயிகள் அகதிகள் ஆனதையும் பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு சென்ற அன்புமணி, அதேபோன்ற நிலைமை காவிரிப் பாசன மாவட்டங்களில் ஏற்படாமல் தடுக்கும்படி கோரினார். அதைக் கேட்ட பிரதமர், சம்பந்தப்பட்ட துறையினருடன் இதுபற்றி பேசுவதாக உறுதியளித்தார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்தும் தொடர்புடையவர்களுடன் பேசுவதாக பிரதமர் உறுதியளித்தார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.