தமிழ்நாடு

காலமானார் பெருந்துறை முன்னாள் எம்எல்ஏ டி.கே.நல்லப்பன்

27th Jul 2019 02:11 AM

ADVERTISEMENT


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும், பெருந்துறை சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான டி.கே.நல்லப்பன் (87) கோவையில் வெள்ளிக்கிழமை காலமானார். 
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகிலுள்ள சீலம்பட்டி என்ற கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் டி.கே.நல்லப்பன்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெருந்துறை ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் நீண்ட காலம் செயல்பட்டவர்.   கடந்த 1980-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், பெருந்துறை தொகுதியில் இருந்து சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 10 சட்டப் பேரவை உறுப்பினர்கள் கொண்ட குழுவுக்கு கொறடாவாக இருந்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு உறுப்பினர், மாநில கணக்குத் தணிக்கைக் குழு உறுப்பினர், கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். 
இந்திய கம்யூனிஸ்ட் இரங்கல்
மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:  இளமைக் காலத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்து செயல்பட தொடங்கினார். 
மூத்த தலைவர்கள் ப.ஜீவானந்தம், கே.பாலதண்டாயுதம், எம்.கல்யாணசுந்தரம், ப.மாணிக்கம் போன்றவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றவர். 
 இவருடைய இழப்பு ஈடு செய்ய இயலாதது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT