கர்நாடக அணைகளிலிருந்து உபரி நீரானது திறக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நொடிக்கு 8,500 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் தடை விதித்துள்ளது.
கேரளம், கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரி நீரானது திறக்கப்பட்டு வரும் நிலையில், வியாழக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 8,100 கன அடி நீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தது.
இந் நிலையில், வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 8,500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தீவிரமாக நீரின் அளவைக் கண்காணித்து வருகின்றனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் தடை விதித்துள்ளது.