தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியைப் பெற மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்: : முதல்வர் பழனிசாமி 

தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியைப் பெறுவதற்கு மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியைப் பெற மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்: : முதல்வர் பழனிசாமி 

தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியைப் பெறுவதற்கு மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

எடப்பாடியில் அவர்  ஞாயிற்றுக்கிழமை  செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழக நிதி நிலைமை குறித்து, சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெளிவாகக் கூறியிருக்கிறார். எனவே, மாநில நிதி ஆதாரத்தைப் பெருக்கி நம்முடைய தேவையை நிவர்த்தி செய்து கொண்டிருக்கின்றோம். ஏற்கெனவே வரவேண்டிய நிதியை பெறுவதற்கு மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

அணை பாதுகாப்பு மசோதா விவகாரம்:  அணை பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் ஒரு முறை கொண்டு வரப்பட்டது. அதிமுக உறுப்பினர்கள் எதிர்த்து குரல் கொடுத்ததன் விளைவாக அந்த மசோதாவை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உருவாக்கப்பட்டது. மீண்டும் கொண்டு வந்தால், எம்.பி.க்கள் அவையிலே எதிர்த்துக் குரல் கொடுப்பார்கள். கேரளத்தில் கோணக்கடவு, முல்லைப் பெரியாறு என தமிழகத்துக்கான பல அணைகள் எல்லாம் கேரள மாநிலத்தில் இருக்கின்றன. இவற்றையெல்லாம் பராமரிக்கக் கூடிய வகையில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று கடந்த கூட்டத் தொடரிலேயே வலியுறுத்தினோம். ஆனால், கொண்டு வரப்படவில்லை.

இப்போது எந்த வடிவத்தில் கொண்டு வருவார்கள் என்று தெரியவில்லை. தமிழகத்துக்குப் பாதுகாப்பான சட்டத்தைக் கொண்டு வந்தால் ஏற்போம். மாநிலத்துக்கு உகந்ததாக இல்லை என்றால் அதை எதிர்ப்போம். எந்தவொரு மாநில அரசும், அணை கட்டவோ, நீரை மறுபக்கம் திருப்பவோ கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பைக் கொடுத்திருக்கிறது. தீர்ப்பின் அடிப்படையில்தான் அனைத்து மாநிலங்களும் செயல்பட வேண்டும். கர்நாடகம், தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களாலும் பின்பற்றப்பட வேண்டும்.

சேலம் உருவாக்காலையை தனியார் மயமாக்கக் கூடாது: சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கக் கூடாது என்று குரல் கொடுத்திருக்கிறோம். தொடர்ந்து குரல் கொடுப்போம். 

உள்ளாட்சித் தேர்தல்: உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு வரையறை முடிவு பெற்றது. உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பான மனுவும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் அறிவிப்பை அந்த மனுவில் குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. ஏற்றுக்கொள்ளப்பட்ட தேதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்றார்.

அத்திவரதரை தரிசிக்க வருவோருக்கு வசதிகள்  

"காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் சிலையை நெரிசல் இல்லாமல் தரிசிப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், துறை செயலாளர்கள், டிஜிபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தற்போது தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்னைகளை ஆராய்ந்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்கு வேண்டிய முன்னேற்பாடுகள் செய்யப்படும். வேறு ஏதாவது இடத்தில் அத்திவரதர் சிலையை வைக்க முடியுமா? என்பது குறித்தும், பக்தர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் சிரமமின்றி தரிசனம் செய்வது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது' என்று முதல்வர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com