மேட்டூர் உபரிநீர் திட்டத்தை முழு அளவில் செயல்படுத்த ராமதாஸ் வேண்டுகோள் 

மேட்டூர் உபரிநீர் திட்டத்தை முழு அளவில் செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் : ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேட்டூர் உபரிநீர் திட்டத்தை முழு அளவில் செயல்படுத்த ராமதாஸ் வேண்டுகோள் 

சென்னை: மேட்டூர் உபரிநீர் திட்டத்தை முழு அளவில் செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் : ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் திங்களன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை சேலம் மாவட்டத்திலுள்ள 100 ஏரிகளில் நிரப்பும்  திட்டம் ரூ.565 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதிக்கு பயனளிக்கும் இத்திட்டம் வரவேற்கத்தக்கதாகும்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, இத்திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தால் மேட்டூர், சங்ககிரி, இடைப்பாடி, ஓமலூர் ஆகிய நான்கு தொகுதி மக்கள் பயன்பெறுவார்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள  ஸ்டான்லி அணை சேலம் மாவட்டத்தில் தான் உள்ளது என்றாலும் கூட காவிரி ஆறாலும், அணையாலும் தங்களுக்கு எந்தவித பயனும் இல்லை என்ற எண்ணம் சேலம் மாவட்ட மக்களுக்கு இருந்து வந்தது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் நிரப்பப்படும். அந்த ஏரிகளைச் சுற்றியுள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அத்துடன் சேலம் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால், அங்கு குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படாது.

அதேநேரத்தில் முதலமைச்சரின் அறிவிப்பு சேலம், நாமக்கல் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக நிறைவேற்றாது. மேட்டூர் அணையின் உபரி நீரை திருமணிமுத்தாறு, சரபங்கா ஆகிய ஆறுகளை இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்கள் வரை கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். 5 இணைப்புகளை மேற்கொள்வதன் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும். இத்திட்டத்தை செயல்படுத்தினால், சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மொத்தம்  30,154 ஏக்கர் நிலங்கள்  நேரடியாக பாசன வசதி பெறும். அத்துடன் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்படுவதன் மூலம் 18,228 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இத்திட்டத்தில் வசிஷ்ட நதி என அழைக்கப்படும் வட வெள்ளாற்றையும் இணைத்தால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வரை காவிரி நீரை கொண்டு வர முடியும். அது அம்மாவட்டங்களின் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com