தமிழ்நாடு

பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்களுக்கு தடை உண்டா, இல்லையா?

22nd Jul 2019 03:11 AM | -சா .ஜெயப்பிரகாஷ்

ADVERTISEMENT


புதுக்கோட்டை:   ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியும் 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலில் உள்ள தடை உத்தரவு, உயர்ரக குளிர்பானங்கள் என்று கூறி விற்பனை செய்யப்படும் பாக்கெட்டுகளுடன் இணைக்கப்படும் உறிஞ்சு குழல்களுக்குப் பொருந்துமா, பொருந்தாதா என்ற கேள்வியை நுகர்வோர் மற்றும் சூழலியலாளர்கள் முன் வைக்கின்றனர்.

மண்ணுக்கு பெரும் கேட்டை விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பொருள்கள் மண்ணில் கலந்து மக்காமல் அப்படியே இருப்பதுடன், அந்த மண்ணின் வளத்தைப் பெருமளவில் பாதிக்கிறது. 

மேலும், பிளாஸ்டிக் பொருள்கள் அதிக வெப்பநிலையில் உடலுக்கு கெடுதலை விளைவிக்கும் ரசாயனங்களை வெளியிடுகின்றன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் 14 வகையான ஒருமுறை பயன்படுத்தும்  பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஒருமுறை பயன்படுத்தும் பாலிதீன் பைகள், டம்ளர்கள், பாலிபுரோபைலின் (பிபி பைகள்) பைகள், பாலிதீன் கலந்த காகிதப் பைகள், டம்ளர்கள், பிளாஸ்டிக் ஸ்பூன்கள் மற்றும் பாலிதீன் கொண்டு தயாரிக்கப்படும் உறிஞ்சு குழல்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. 

ADVERTISEMENT

இந்தப் பட்டியலில் உறிஞ்சு குழல்களின் பயன்பாடு மிக அதிகமானது என சூழலியலாளர்கள் தொடக்கம் முதலே குரல் எழுப்பி வந்தனர். அதாவது, மிகச் சாதாரணமாக இளநீர், பழச்சாறுகள், குளிர்பானங்கள் அருந்தும்போது, வண்ண வண்ண உறிஞ்சு குழல்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. 

ஆச்சரியப்படும் வகையில் நாளொன்றுக்கு பெருநகரங்களில் மட்டும் கோடிக்கணக்கான உறிஞ்சுகுழல்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதன்பயன்பாட்டைத் தவிர்க்கும் வகையில் "நோ ஸ்ட்ரா டே' போன்ற விழிப்புணர்வு சபதங்களும், சமூக ஊடகங்களின் மூலம் சூழலியலாளர்களால் முன் வைக்கப்பட்டன. 

இந்தத் தடை வந்த பிறகு இளநீர் விற்பவர்களிடம் 99 சதவிகிதம் பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்களைப் பார்க்க முடியவில்லை. அதேபோல, பழச்சாறுகள், குளிர்பானங்கள் விற்பனை செய்யும் இடங்களில் மக்காச் சோளத்தால் தயாரிக்கப்படும் குழல்களும், காகிதக் குழல்களும் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. 

ஆனால், தெரிந்தோ, தெரியாமலோ இன்னமும் சில குளிர்பான பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் சரளமான பயன்பாட்டில் உள்ளன. உயர்ரக குளிர்பானம் என்ற பெயரில் சதுர வடிவிலான -  காகிதப் பெட்டியைப் போல தயாரிக்கப்படும் பாக்கெட்டுகளில் இந்த பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்களும், அதற்கான பாதுகாப்பாக தடைப் பட்டியலுக்குள் வரும் சிறிய பாலிதீன் கவரும் இப்போதும் விற்பனையில் உள்ளன.

தடையின் தொடக்கக் காலத்தில் பெருநிறுவனங்களின் உற்பத்திப் பொருள்களுக்கு இந்தப் பிளாஸ்டிக் தடை பொருந்துமா என்ற கேள்வியை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் வட்டாரத்தில் கேட்டபோது, பெருநிறுவனங்களுக்கு உரிய அறிவிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக அவற்றிலும் தடை கறாராக அமலாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தடை அமலுக்கு வந்து ஏழாவது மாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையிலும்கூட இந்த உறிஞ்சு குழல்கள் பயன்பாட்டில் இருப்பது நுகர்வோர் மத்தியிலும், சூழலியலாளர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசு நிறுவனமான ஆவின் பால் பொருள்கள் மாநிலம் முழுவதும் பிரபலமாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஆவின் நிறுவனம் தயாரிக்கும் வகை வகையான மில்க் ஷேக்குகளின் பாக்கெட்டுகளிலும் இதேபோன்ற பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்களும், அவற்றுக்கான சிறிய அளவிலான பிளாஸ்டிக் கவர்களும் இடம்பெறுகின்றன. 
இதேபோல, விருந்துகளின்போது பல் குத்த உதவும் சிறிய குச்சிகள் வெற்றிலைப் பாக்கு மற்றும் பழங்கள் வைக்கப்படும் பகுதியில் இடம்பெறுவது நாகரீகமாகக் கருதப்பட்டு வருகிறது. இப்போது, இந்தக் குச்சிகளையும் பிளாஸ்டிக் குச்சிகளாக மாற்றிவிட்டனர். 

எனவே, மாநில அரசு இவற்றையும் குறிப்பிட்டு பிரத்யேக அரசாணை வெளியிடுவதுடன் இவற்றின் மீதான தடையையும் கறாராக அமலாக்கி நடவடிக்கை  எடுக்க வேண்டும் என சூழலியலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT