தமிழ்நாடு

சந்திரயான்-2 இன்று விண்ணில் பாய்கிறது

22nd Jul 2019 04:24 AM

ADVERTISEMENT

 

நிலவில் ஆய்வை மேற்கொள்ள உள்ள சந்திரயான்-2 விண்கலம், அதிக திறன்கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்3-எம்1 ராக்கெட் மூலம் திங்கள்கிழமை (ஜூலை 22) பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது.

கடந்த 15-ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணுக்கு அனுப்பப்பட இருந்த இந்த விண்கலம், ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடைசி 56 நிமிடங்கள் இருக்கும்போது கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டு ராக்கெட் ஏவுவது நிறுத்திவைக்கப்பட்டது. 

தொழில்நுட்பக் கோளாறை விஞ்ஞானிகள் கண்டறிந்து சரிசெய்ததைத் தொடர்ந்து, மீண்டும் திங்கள்கிழமை பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணுக்கு அனுப்பப்படுகிறது.

ADVERTISEMENT

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவு தளத்திலிருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.

இதற்கான இறுதிக்கட்ட பணிகள் அனைத்தையும் முடித்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள், ராக்கெட் ஏவுவதற்கான கவுன்ட்-டவுனை ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கினர்.

உலக நாடுகளில் முதல் முறை...: இதுவரை எந்தவொரு உலக நாடும் அனுப்பாத நிலவின் தென்துருவப் பகுதிக்கு இந்தியாவின் சந்திரயான்-2 விண்கலம் ஆய்வுக்காக அனுப்பப்படுகிறது. 

அதுமட்டுமன்றி அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவின் பரப்பில் விண்கலத்தை மெதுவாக தரையிறக்கும் முதல் முயற்சியில் இந்தியா ஈடுபடுகிறது. இதுபோன்ற பல்வேறு சாதனைகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் படைக்க உள்ளதால், சந்திரயான்-2 திட்டம் இந்திய மக்களிடையே மட்டுமன்றி, உலக நாடுகளிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சந்திரயான்-1 விண்கலம்: இஸ்ரோ முதலில் நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 விண்கலத்தை கடந்த 2008 அக்டோபர் 22-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பியது. நிலவின் வடதுருவத்தில் தரையிறங்கி 312 நாள்கள் ஆய்வை மேற்கொண்ட இந்த விண்கலம், நிலவின் பரப்பில் பனிக்கட்டி வடிவில் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்தி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. 

பயன் என்ன?: நிலவில் சந்திரயான்-1 விண்கலம் கண்டறிந்தவற்றிலிருந்து, அடுத்தகட்ட ஆய்வை மேற்கொள்வதற்காக, சந்திரயான்-2 விண்கலம் அனுப்பப்படுகிறது. இதுவரை எந்தவொரு நாட்டின் விண்கலமும் சென்றிடாத, நிலவின் தென் துருவத்தில் முதன் முறையாக தரையிறங்கி ஆய்வை மேற்கொள்ள உள்ளது. 

நிலவின் தென் துருவத்திலும் தண்ணீர் மற்றும் பிற கனிமங்கள் இருப்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படுவதோடு, சூரியக் குடும்பத்தின் வரலாறு குறித்து புரிந்துகொள்வதற்கான தகவல்களைப் பெறுவதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

நிலவில் மனிதர்களின் குடியிருப்புக்கு சாத்தியமான இடங்களில் ஒன்றாக தென்துருவம் கருதப்படுகிறது. இதற்கான சாத்தியக்கூறுகளையும் இந்த ஆய்வு நமக்குத் தர உள்ளது.

அதன் மூலம், நிலவில் மனிதன் வாழ முடியுமா என்பது குறித்து உலகம் முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு இந்த சந்திரயான்-2 திட்டம் முன்மாதிரியாக விளங்கும்" என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

ராக்கெட் ஏவப்பட்ட 50-ஆவது நாளில் விண்கலத்தின் ஆர்பிட்டர் பகுதிக்குள் இருந்து லேண்டர் பிரித்துவிடப்படும். இது  54-ஆவது நாள்  நிலவின் தென் துருவத்தில் மெதுவாகத் தரையிறக்கப்படும்.

லேண்டர் தரையிறங்கிய 4 மணி நேரத்துக்குப் பின்னர், அதனுள் இருக்கும் 6 சக்கரங்களுடன் கூடிய ரோவர் கலம் இறக்கிவிடப்படும்.          

தொழில்நுட்பக் கோளாறு ஏற்படாது

சந்திரயான்-2 விண்கலம் அனுப்பும் திட்டத்தில் இனிமேல் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுவதற்கு சாத்தியம் இல்லை என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: 

சந்திரயான்-2 விண்கலத்தை ஏவும் ஜிஎஸ்எல்வி-மார்க் 3 ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது. இனிமேல் தொழில்நுட்பக் கோளாறு நடப்பதற்கான சாத்தியமே இல்லை. சந்திரயான்- 2 விண்கலம் திங்கள்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும்.  

இதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை 6.43 மணிக்கு கவுன்ட்டவுன் தொடங்குகிறது.  விண்ணில் ஏவிய பிறகு 48 நாள் 15 கட்டங்களைக் கடந்து நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-2 இறங்கும். சந்திரயான்-1 நீர் மூலக்கூறு இருப்பதைக் கண்டறிந்தது போல் சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படுவதை உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருகின்றன என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT