சந்திரயான் 2 விண்கலம் நாளை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன்

சந்திரயான் 2 விண்கலம் நாளை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தரிவித்துள்ளார்.
சந்திரயான் 2 விண்கலம் நாளை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன்

சந்திரயான் 2 விண்கலம் நாளை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 

நிலவை ஆய்வு செய்வதற்காக, இந்தியா சார்பில் முதன் முதலில் "சந்திரயான்-1' என்ற விண்கலம் பி.எஸ்.எல்.வி.-சி11 ராக்கெட் மூலம் கடந்த 2008 அக்டோபர் 22-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்டது.  சந்திரனில் தரையிறங்கி 312 நாள்கள் ஆய்வை மேற்கொண்ட இந்த விண்கலம், நிலவின் பரப்பில் பனிக்கட்டி வடிவில் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்தி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. மேலும், மெக்னீஷியம், அலுமினியம், சிலிக்கான் போன்ற தாதுக்களும் நிலவின் பரப்பில் படிமங்களாக இருப்பதையும் "சந்திரயான்-1' கண்டறிந்தது. அதன் தொடர்ச்சியாக, "சந்திரயான்-2' விண்கலத்தை இந்தியாவின் மிகுந்த சக்தி வாய்ந்த 4,000 கிலோ எடையைத் தாங்கிச் செல்லக்கூடிய ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 - எம்1ராக்கெட் மூலம், கடந்த 15-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டது.  

இதுவரை எந்த நாடும் செல்லாத நிலவின் தென்துருவப் பகுதிக்கு விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொள்ள  இருப்பதாலும், அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவின் பரப்பில் விண்கலத்தை  மெதுவாகத் தரையிறக்கும் முயற்சியை முதன்முறையாக இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொள்ள உள்ளதாலும், "சந்திரயான்-2' திட்டம் இந்திய மக்களிடையே மட்டுமின்றி, உலக நாடுகளிடையேயும் மிகுந்து எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியுள்ளது. ராக்கெட்டை ஏவுவதற்கான கவுன்ட்-டவுன் ஜூலை 14 காலை 6.51 மணிக்கு தொடங்கப்பட்டது. ராக்கெட் ஏவுவதை நேரில் காண ஏராளமான பொதுமக்கள் விண்வெளி ஆய்வு மைய வளாகத்தில் நள்ளிரவில் குவிந்திருந்தனர்.  இந்த நிலையில், ராக்கெட்டை ஏவுவதற்கு 56 நிமிடங்கள் 24 விநாடிகள் இருக்கும்போது, கவுன்ட்-டவுன் திடீரென நிறுத்தப்பட்டது. உடனடியாக, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக, விண்வெளி ஆய்வு மைய ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்பட்டது. 

இந்த அறிவிப்பு வந்த அரை மணி நேரத்தில், ராக்கெட்டில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக "சந்திரயான்-2' விண்ணுக்கு அனுப்பும் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும். ராக்கெட் ஏவும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் இஸ்ரோ சார்பில் அறிவிக்கப்பட்டது.  ராக்கெட் ஏவுவது கடைசி நேரத்தில் நிறுத்திவைக்கப்பட்டது, அனைவரிடையேயும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ராக்கெட்டில் ஹீலியம் எரிபொருள் கசிவுதான், கடைசி நேர தள்ளிவைப்புக்குக் காரணம். கசிவைச் சரிசெய்யாமல் ஏவினால், ராக்கெட் வெடித்து சிதறும் அபாயம் உள்ளது. கடைசி நேரத்தில் கசிவு சரிசெய்ய முடியாததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விஞ்ஞானிகள் இத்திட்டத்தை நிறுத்தி வைத்தனர். இதன் மூலம் பல கோடி ரூபாய் இழப்பு தடுக்கப்பட்டிருக்கிறது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதனிடையே ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, விண்கலத்தை வரும் திங்கள்கிழமை (ஜூலை 22) விண்ணுக்கு அனுப்ப முடிவு செய்திருப்பதாக இஸ்ரோ அறிவித்தது. 

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 

சந்திரயான் விண்கலத்தை ஏவும் ஜிஎல்எல்வி-மார்க் 3 ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது. இனிமேல் தொழில்நுட்ப கோளாறு நடப்பதற்கான சாத்தியமே இல்லை. சந்திரயான் 2 விண்கலம் நாளை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்படும். இன்று மாலை 6.43 மணிக்கு கவுண்டவுன் தொடங்குகிறது. நாளை பகல் 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படுகிறது. விண்ணில் ஏவியபின் 48 நாள் 15 கட்டங்களை கடந்து நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-2 இறங்கும். சந்திரயான் 1 நீர் மூலக்கூறு இருப்பதை கண்டறிந்தது போல் சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்படுவதை உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருகின்றன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com