அத்திவரதரை காண 5 கி.மீ. நடந்து சென்று தரிசித்த பக்தர்கள்

அத்திவரதர் பெருவிழாவின் 20-ஆம் நாளான சனிக்கிழமை சுமார் 5 கி.மீ. தூரம் நடந்து சென்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். 
20-ஆவது நாளான சனிக்கிழமை இளஞ்சிவப்பு நிறப் பட்டாடையில் காட்சியளித்த  அத்திவரதர்.
20-ஆவது நாளான சனிக்கிழமை இளஞ்சிவப்பு நிறப் பட்டாடையில் காட்சியளித்த  அத்திவரதர்.

காஞ்சிபுரம்: அத்திவரதர் பெருவிழாவின் 20-ஆம் நாளான சனிக்கிழமை சுமார் 5 கி.மீ. தூரம் நடந்து சென்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

அத்திவரதர் பெருவிழாவால் காஞ்சிபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளதோடு நாள்தோறும் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிந்து அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். 

கடந்த வியாழக்கிழமை அதிகபட்சமாக 2.75 லட்சம் பக்தர்கள் வருகை புரிந்தனர். நெரிசலில் சிக்கி, இதுவரை 6 பேர் இறந்ததால், பாதுகாப்பு ஏற்பாடுகள், கூடுதல் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

அதன்படி, கிழக்கு கோபுரம் அருகே பந்தல் அமைக்கப்பட்டுள்ளதோடு குடிநீர், கழிப்பறை வசதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மருத்துவ முகாம்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. 

5 கி.மீ. தூரம் நடந்து சென்று தரிசனம்: காஞ்சிபுரத்துக்கு திரளான பக்தர்கள் வருகை புரிவதால் தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து வந்த பேருந்துகள் கடந்த இரண்டு நாள்களாக ரங்கசாமி குளத்தோடு நிறுத்தப்பட்டன.

இதனால், பக்தர்கள் காந்தி சாலை, ரங்கசாமி குளம், திருக்கச்சி நம்பி தெரு வழியாக நடந்து வடக்கு மாடவீதிகளுக்கு சென்றனர். பின்பு, அங்கிருந்து கிழக்கு கோபுரம் மற்றும் ஆழ்வார் சந்நிதிகள் வழியாகச் சென்று தரிசனம் செய்தனர். இதனால், சுமார் 5 கி.மீ. தூரம் நடந்து சென்று தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதால், பெரும்பாலான பக்தர்கள் களைப்படைந்தனர். 

அன்னதானத்துக்கு ஏற்பாடு: கடந்த 19 நாள்களாக கோயிலுக்குள் குடிநீர் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சனிக்கிழமை முதல் கிழக்கு கோபுர நுழைவுப்பகுதியில் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, 3 இடங்களில் தொண்டு அமைப்புகள் சார்பில் அன்னதானம் செய்யப்பட்டது. முதியோர் மற்றும் வெளியூர்களிலிருந்து வந்தோர் இங்கு உணவருந்தினர்.  ஆங்காங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. மேலும், மயக்கமடைந்தோருக்கு அவ்வப்போது உப்பு சர்க்கரை கரைசல் குடிநீர் வழங்கப்பட்டதால் எவ்வித சிரமமுமின்றி ஆழ்வார் சந்நிதிகளில் பக்தர்கள் நெரிசலின்றி சென்றனர்.

காவலர்களுக்கு பாராட்டு: நள்ளிரவுக்கு மேல் வந்த பக்தர்களை போலீஸார் கோயில் வளாகத்துக்குள் அனுமதித்ததோடு, பந்தலுக்கு அருகே இளைப்பாறச் செய்தனர்.

சனிக்கிழமை பக்தர்களின் கூட்டம் அளவுக்கு அதிகமாக  இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு நாள்களில் 5 பேர் பலியானதால் பக்தர்களின் வருகை கணிசமாகக் குறைந்தது.

அதேசமயம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளிலிலிருந்து திரளான பக்தர்கள் வருகை புரிந்த வண்ணம் இருந்தனர். அதிகாலை 4.50 மணிக்கு கிழக்கு, வடக்கு, தெற்கு மாடவீதிகளிலிருந்து வந்த பக்தர்கள் கிழக்கு கோபுர வாசல் வழியாக அனுமதிக்கப்பட்டனர். 

ஆங்காங்கே காவலர்கள் தடுப்புகள் அமைத்து, கூட்டத்தை சீராக ஒழுங்குபடுத்தினர். இதற்காக, கூடுதல் காவலர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தனர். இதனால், சிரமமின்றி அத்திவரதரை பக்தர்கள் தரிசனம் செய்ய முடிந்தது. 

இளஞ்சிவப்பு நிறப் பட்டாடையில் அத்திவரதர்: பெருவிழாவின் 20-ஆம் நாளான சனிக்கிழமை இளஞ்சிவப்பு நிறப் பட்டாடை, பச்சை அங்கவஸ்திரம் அணிந்து அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மல்லிகை, துளசி, அரளி, மரிக்கொழுந்து, செண்பகப்பூ உள்ளிட்ட மாலைகளால் அலங்கரிக்கப்பட்டார். பின்பு,  நைவேத்தியத்தோடு தீபாராதனை நடைபெற்றது. 

இதையடுத்து, வஸந்த மண்டபத்தையொட்டி உள்ள வரிசைகளில் அத்திவரதரைக் காண பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது.  ஆழ்வார், தேசிகர் சந்நிதிகள் வழியாக பக்தர்கள் பொதுதரிசன வரிசையில் வந்து அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

முக்கியஸ்தர்கள் வரிசையும் சீரானது: நாள்தோறும் பொதுதரிசனத்தை விட முக்கியஸ்தர்கள் தரிசன வரிசையில் வாக்குவாதம், தள்ளுமுள்ளு காணப்பட்டது. முக்கியஸ்தர்கள் வரிசை ஒழுங்குமுறைப் படுத்தப்பட்டதோடு, தடுப்புகள் அமைத்து சீரான வரிசையில் செல்லும் வகையில் ஏற்பாடுகளில் மாற்றம் செய்யப்பட்டது.

வஸந்த மண்டபத்துக்கு வரும் போது இரண்டு வரிசையாக பிரிக்கப்பட்டு, மிக முக்கியஸ்தர்கள் வஸந்த மண்டபத்து வாயிலில் வலது புறம் சென்று அவ்வழியாக வெளியே வரும் வகையிலும், மற்ற முக்கியஸ்தர்கள், அனுமதிச் சீட்டு வைத்துள்ளோர் இடது புறம் சென்று வரும் வகையில் வரிசை மாற்றப்பட்டிருந்தது. இதனால், முக்கியஸ்தர்கள் வரிசையும் சீரானது. 2-ஆவது நாளாக ஆன்லைன் பதிவு விரைவு தரிசனம் மாலை 6 மணி முதல் நடைபெற்றது.

பயன்பாட்டுக்கு வந்த மற்றுமொரு சாய்வு தளப் பாதை: வழக்கமாக மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், கைக்குழந்தையோடு வருபவர்கள் ஆழ்வார் சந்நிதிகள் வரை பேட்டரி கார், சக்கர நாற்காலி மூலம் வருவர். அதன்பிறகு, தனிவரிசையின் மூலம் அத்திவரதரை தரிசனம் செய்து வந்தனர். 
பொது வரிசையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் இப்பாதையை இதர பக்தர்களும் பயன்படுத்தி வந்தனர். இதற்காக, மாவட்ட நிர்வாகம் வஸந்த மண்டபத்தின் பிரதான சாய்வு தளத்துக்கு அருகிலேயே மற்றுமொரு சாய்வு தளப் பாதையை அமைத்துள்ளது. 

தற்போது கிழக்கு கோபுரத்திலிருந்து வரும்போதே மாற்றுத் திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோரை காவலர்கள் தனிவரிசையில் அனுப்பினர். தொடர்ந்து, அவர்கள் சக்கர நாற்காலிகள் மூலம் பிரத்யேக சாய்வு தளப் பாதை வழியாக வஸந்த மண்டபத்துக்கு சென்று அத்திவரதரை எவ்வித இடையூறுமின்றி தரிசனம் செய்தனர். 

தரிசனத்துக்கு 4 மணி நேரம்: பக்தர்கள் அதிகபட்சமாக 4 மணி நேரத்திலும், குறைந்த பட்சமாக 2 மணி நேரத்திலும் அத்திவரதரை தரிசனம் செய்தனர். வெள்ளிக்கிழமை இரவு 11 மணி வரை 1.50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். சனிக்கிழமை மாலை 6 மணி வரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர்.

முக்கியஸ்தர்கள் தரிசனம்..: கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா, அமைச்சர் வேலுமணி, முன்னாள் அமைச்சரும், திருச்சி மேற்குத் தொகுதி எம்எல்ஏவுமான கே.என்.நேரு, சென்னை தியாகராயநகர் தொகுதி எம்எல்ஏ சத்யா, காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு, நடிகை ஊர்வசி உள்ளிட்டோர் சனிக்கிழமை அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com