திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

ஏன் நான் விஐபி இல்லையா? பணிவோடு கேட்கிறார் ரவுடி வரிச்சியூர் செல்வம்!

DIN | Published: 19th July 2019 12:41 PM


சென்னை: காஞ்சிபுரம், அத்திவரதர் தற்போது மக்களிடையே அதிகம் டிரெண்டாகி இருக்கும் வார்த்தைகள் இவ்விரண்டும்.

இதுவரை அத்திவரதரை தரிசிக்காதவர்கள் கூட, அடுத்த மாதம் யாராவது அத்தி வரதரை நான் பார்க்கவில்லை என்று சொன்னால் ஏற இறங்க பார்ப்பார்களோ என்று உள்ளூர ஒரு அச்சத்தில்தான் இருக்கிறார்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம், தமிழகத்தின் பெரும்பாலான மக்கள் அத்திவரதரை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் காஞ்சிபுரமே பக்தர்கள் கூட்டத்தால் திணறி வருகிறது. 
இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் விஐபிக்கள் செல்லும் வழியில் தனது சகாக்களுடன், அத்திவரதருக்கு நெருக்கமாகச் சென்று குடியரசுத் தலைவர் வந்த போது எங்கு அமர்ந்து சுவாமியை தரிசனம் செய்தாரோ அதே இடத்தில் அமர்ந்து தரிசனம் செய்து திரும்பினார்.

கழுத்தில் சில கிலோ தங்க நகைகளுடன், நகைக் கடை விளம்பர மாடல் போல வந்த வரிச்சியூர் செல்வம், சுவாமியை தரிசித்து வெளியே வந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, கூட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகி அத்திவரதரை தரிசித்துத் திரும்பியவர்கள் காதில் புகையை வரவழைத்தது.

ஒரு ரவுடி எப்படி விஐபி தரிசனம் செய்ய முடியும் என்று கேள்விகள் எழுந்தன. பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் ஒரு ரவுடிக்கு விஐபி தரிசனம் கிடைத்தது எப்படி என்ற கேள்வியும் எழுந்தது. 

சரி இது குறித்து யாரிடம் கேட்பது என்று மைக்கைப் பிடித்துக் கொண்டு துழாவிக் கொண்டிருந்த போது, வேறு யாருமல்ல அந்த வரிச்சியூர் செல்வமே ஒரு ஊடகத்தில், அத்திவரதர் தரிசனம் குறித்து பேட்டியளித்திருப்பது கொத்தாக சிக்கியது.

இதற்கு மேல் என்ன வேண்டும் சொல்லுங்கள் பார்க்கலாம்.. வாருங்கள் அவர் இந்த நாட்டு மக்களுக்கு என்ன சொல்கிறார் என்று கேட்கலாம்.

நான் மிகப்பெரிய தெய்வ பக்தன். 36 ஆண்டுகள் ஐயப்பனை சென்று தரிசித்துள்ளேன். அப்படிப்பட்ட நான் அத்திவரதரை தரிசித்ததில் என்ன தப்பு. கடவுளை வணங்குவதால்தானே அத்திவரதரை தரிசித்துள்ளேன் என்று ஆரம்பித்தார்.

மேலும், நான் வைத்திருக்கும் ஒரு காரின் விலை ஒரு  கோடி ரூபாய். இதுபோல எங்கிட்ட 7 கார் இருக்கு. அப்போ நான் விஐபி இல்லையா? என்று நம்மையே திருப்பிக் கேட்கிறார் வரிச்சியூர் செல்வம்.

அதற்காக ரவுடி போலவே அத்திவரதரை தரிசிக்கச் செல்ல வேண்டுமா என்று அவரிடம் கேட்டிருப்பார்கள் போல.

அதற்கு அவர் சொல்கிறார், என்ன நான் தாதாவா, எனக்கு 4 பேரன், பேத்திங்க இருக்கிறார்கள். நான் தாதாவெல்லாம் கிடையாது. இப்போது வெறும் தாத்தா தான் என்று சிரித்தபடியே பதில் சொல்லியிருக்கிறார்.

மேலும், பளிச்சென்று தெரிய வேண்டும் என்பதற்காகவே ஆடை அலங்காரத்தோடு இருப்பேன். கழுத்தில் வெறும் 250 சவரன் நகை மட்டும்தான் போட்டிருக்கிறேன். அதுவும் முருகன், அம்மன் சிலை டாலர்கள் கொண்ட செயின்தான் என்கிறார் பவ்யமாக.

எல்லாமே சொன்னார். ஆனால், அந்த விஐபி டிக்கெட் எப்படி கிடைத்தது என்று மட்டும் சொல்லாமல் விட்டுவிட்டார்.

கடைசியாக ஒரு பஞ்ச், என்னைப் பற்றி பத்திரிகைகளல் தப்பு தப்பா எழுதறாங்க. அதனால் ஒரு பத்திரிகையில் இணை ஆசிரியராக இருக்கிறேன் என்றாரே பார்க்கலாம்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

அத்திவரதர் சிலை வைக்கப்பட்டிருக்கும் அனந்தசரஸ் குளத்தில் ஆழ்துளைக் கிணற்று நீரை நிரப்ப நீதிமன்றம் உத்தரவு
ஆசிய தடகளப்போட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரருக்கு திமுக ரூ. 5 லட்சம் நிதியுதவி 
ஆகஸ்ட் 24 இல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்: அன்பழகன் அறிவிப்பு 
கீழடியில் மிக நீண்ட கோட்டைச்சுவர் கண்டுபிடிப்பு
காஷ்மீர் விவகாரம்: தில்லியில் ஆகஸ்ட் 22-இல் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்