தமிழ்நாடு

வேலூர் மக்களவைத் தேர்தல்: கதிர் ஆனந்த், ஏ.சி.சண்முகம் வேட்புமனுக்கள் ஏற்பு  

19th Jul 2019 02:26 PM

ADVERTISEMENT

வேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 11-ஆம் தேதி வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் உள்பட 7 பேர் மனு தாக்கல் செய்தனர். தொடர்ந்து, 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை சுயேச்சை வேட்பாளர்கள் 3 பேரும், சனி, ஞாயிறு  விடுமுறையைத் தொடர்ந்து, 3-ஆவது நாளான திங்கள்கிழமை நாம்  தமிழர் கட்சி வேட்பாளர் எஸ்.தீபலட்சுமி  உள்பட 7 பேரும், 4-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை 4 பேரும்,  5-ஆவது நாளான புதன்கிழமை திமுக சார்பில் டி.கதிர்ஆனந்த் உள்பட 9  பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்ய வியாழக்கிழமை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிறைவு நாளில் தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தைச் சேர்ந்த ஏ.ஹபிபுல்லா, சுயேச்சை வேட்பாளர்களாக காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ வாலாஜா ஜே.அசேன், ஏ.ஜி.சண்முகம், பி.செல்லபாண்டியன், ஜி.ஆர்.எம், எஸ்.சண்முகம், முரளி, எஸ்.உமாசங்கர், எம்.தனலட்சுமி, ஈ.கருணாநிதி, பி.சதீஷ், ஏ.விஜய்பவுல்ராஜா, டி.டேவிட், எஸ்.செல்லக்குமார் ஆகியோருடன், ஏற்கெனவே மனு தாக்கல் செய்துள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எஸ்.தீபலட்சுமி, தமிழ்நாடு இளைஞர் கட்சியைச் சேர்ந்த ஆர்.நரேஷ்குமார், தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்நத் பிஷப் காட்ப்ரே நோபிள் ஆகியோர் கூடுதல் மனு என 17 பேர் மனு தாக்கல் செய்தனர். 

அதன்படி, வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட மொத்தம் 44 பேர் 50 மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். தொடர்ந்து, வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. கதிர் ஆனந்த், ஏ.சி.சண்முகம் வேட்புமனுக்களை பரிசீலித்த தேர்தல் நடத்தும் அதிகாரி சண்முகசுந்தரம் வேட்புமனுக்களை ஏற்பதாக அறிவித்துள்ளார். வேட்புமனு வாபஸ் பெற 22-ஆம் தேதி கடைசி நாள். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து வேலூர் தொகுதியில் அதிமுக, திமுக இடையேதான் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT